‘என்னை ஹீரோவாக்க யோசிச்சாங்க’ - ‘லல் டுடே’ 100வது நாளில் பிரதீப் ரங்கநாதன் உருக்கம் !

‘கோமாளி’ படத்தை யாரும் பாராட்டவில்லை என்று இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். 2K கிட்ஸ்களின் கதையம்சம் கொண்டு உருவான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ‘லவ் டுடே’ படத்தை இயக்கி நடித்தார். சமகால காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் சூப்பர் ஹிட்டடித்து அனைவரின் பாராட்டை பெற்றது.
தற்போது இந்த படம் 100 நாட்களை கடந்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை நேற்று பிரம்மாண்டமாக விழாவாக ஏஜிஎஸ் நிறுவனம் கொண்டாடியது. இந்த விழாவில் பேசிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், இந்த படத்தின் வெற்றி மகிழ்ச்சியை அளிக்கிறது. என்னை ஹீரோவாக அறிமுகப்படுத்த பலரும் யோசித்தார்கள். ஆனால் ஏஜிஎஸ் நிறுவனம் தான் அறிமுக ஹீரோவாக இருந்தாலும், கதையை நம்பி என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தார்கள்.
நான் கல்லூரி படித்த போது யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் கிடைக்காமல் சுவரின் மீது ஏறி நின்று பார்த்தேன். ஆனால் தற்போது அவரின் இசையில் படம் இயக்கியது பெருமையாக இருக்கிறது. ‘லல் டுடே’ படத்தின் வெற்றிக்கு பணியாற்றிய அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்தார்.