ஆரவாரமின்றி வசூலை குவிக்கும் 'லக்கி பாஸ்கர்'; காட்சிகளும் அதிகரிப்பு...!
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையன்று வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பின் காரணமாக தமிழ்நாட்டில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 31ஆம் தேதி தீபாவளி பண்க்டிகையன்று வெளியான திரைப்படம் 'லக்கி பாஸ்கர்'. இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான ’லக்கி பாஸ்கர்’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
தனியார் வங்கி ஊழியரான துல்கர் சல்மான் பணக் கஷ்டம் காரணமாக பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் பதவி உயர்வு கிடைக்காமல் போக, வங்கியில் திருட்டு வேலையில் ஈடுபட்டு ராம்கியுடன் இணைந்து தொழில் செய்கிறார். ஒரு கட்டத்தில் தான் செய்யும் குற்றத்தை உணரும் துல்கர், அதிலிருந்து எவ்வாறு தப்பிக்கிறார் என்பதே மீதிக் கதை. லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளியானது முதல் மாபெரும் வரவேற்பை பெற்று, வசூலும் அதிகரித்து வருகிறது தமிழில் அமரன், பிரதர், பிளடி பெக்கர் என மூன்று திரைப்படங்கள் வெளியான நிலையிலும் லக்கி பாஸ்கர் பாசிடிவ் விமர்சனம் காரணமாக காட்சிகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழ்நாடு முழுவதும் வெறும் 75 காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில், படத்தின் வெற்றி காரணமாக ஒரு வாரத்தில் 534 காட்சிகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரபல சினிமா இணையதளம் சாக்னில்க் வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை அனைத்து மொழிகளிலும் சேர்த்து 50 கோடி வரை வசூல் செய்துள்ளது. அதிகபட்சமாக கடந்த வார இறுதியில் 8 கோடி வரை வசூல் செய்துள்ளது. மேலும் உலக அளவில் 60 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.