“ரஜினி பட டைட்டிலை வைத்திருப்பது பெருமை” - ‘மாவீரன்’ ப்ரோமோஷன் விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு !
ரஜினியின் ‘மாவீரன்‘ படத்தின் டைட்டிலை வைத்துள்ளது பெருமையாக இருக்கிறது என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ திரைப்படம் வரும் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இன்று சென்னையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துக்கொண்டு பேசிய சிவகார்த்திகேயன், படத்தின் ரிலீஸ் குறித்து பதற்றம் எனக்கு அதிகமாக உள்ளது. இயக்குனர் மடோன் அஸ்வின் படங்களில் சமூக பார்வையும், அக்கறையும் இருக்கும். அதை ஜனரஞ்சகமாக ரசிகர்கள் விரும்பும் வகையில் கொடுப்பார். ‘மாவீரன்’ படத்திலும் அந்த சமூக அக்கறை உள்ளது.
தமிழ் சினிமாவில் மிஷ்கின் அளவிற்கு யாரும் எனன்னை கொஞ்சியிருப்பார்களாக என தெரியவில்லை. அந்த அளவிற்கு அன்பை கொடுத்தார். அவரது திரைப்படங்கள் அனைத்தும் எனக்கு பிடிக்கும். அவர் ஒரு கறாரான ஆள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் மிகவும் இனிமையானவர். இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ரசிக்கும்படி செய்துள்ளார்.
மேலும் பேசிய அவர், இந்த படத்திற்கு ரஜினியின் தலைப்பை வைத்திருப்பது பெருமையாக உள்ளது. அது கெடாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்புணர்வும் அதிகமாக உள்ளது. கடைசியாக வெளியான படம் சறுக்கிவிட்டது. பொதுவாக தோல்விக்கு மட்டும் நான் பொறுப்பேற்று கொள்வேன். வெற்றி என்பது மொத்த குழுவின் உழைப்பால் கிடைப்பது என்று கூறினார்.