”எனது திரை வாழ்விலேயே ’மதகஜராஜா’ தான் சிறந்த படம்”... நடிகர் விஷால் உருக்கம்

vishal

பொங்கலுக்கு வெளியான ’மதகஜராஜா’ திரைப்படத்தின் வெற்றிக்காக நடிகர் விஷால் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.
 

'மதகஜராஜா' திரைப்படமானது 50 கோடியைக் கடந்து வசூல் செய்துள்ளது. இந்த பொங்கலுக்கு வெளியான படங்களில் பெருவாரியான வெற்றியைப் பெற்ற படமாக ’மதகஜராஜா’ மாறியுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டே வெளியீட்டிற்கு தயாராக இருந்த 'மதகஜராஜா' திரைப்படம் பல்வேறு காரணங்களால் பல வருடங்களாக தள்ளிப் போனது. இந்நிலையில் இந்த பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடித்த ’விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் தள்ளிப் வைக்கப்பட்டது. இதனையடுத்து 'மதகஜராஜா' பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டது. பல வருடங்கள் பழைய படம் என்றாலும் கமர்ஷியலாக சிரிக்க வைத்ததால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் வசூலும் மிகப்பெரிய இலாபத்தை கொடுத்துள்ளது.

vishal

’மதகஜராஜா’ திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டமும் நன்றி தெரிவிக்கும் விழாவும் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில் மீண்டும் நன்றி தெரிவித்து நடிகர் விஷால் பதிவு ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "12 வருடங்கள் பழைய படமாக இருந்தாலும் ’மதகஜராஜா’ திரையரங்குகளில் நன்றாக ஓடி வருகிறது.

படம் வெளியாகி இரண்டு வாரங்களாகி விட்டாலும் இன்னும் 75% திரையரங்குகளில் ’மதகஜராஜா’ ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் தற்போது 375 காட்சிகள் தற்போதும் வெற்றிகரமாக ஓடி வருகிறது. கடவுளின் ஆசிர்வாதத்தால்தான் இந்த அற்பதம் நிகழ்ந்துள்ளது. திரையரங்க உரிமையாளர்கள் என்னிடம் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். 


வார நாட்களிலும் குழந்தைகளுடன் குடும்பங்கள் காட்சிகளுக்கு வருவதாக கூறினர். இதுதான் உண்மையான வெற்றி. எனது திரை வாழ்க்கையிலேயே வசூலிலும் மக்கள் பேராதரவிலும் இந்த படம்தான் சிறந்த படமாகும். இயக்குநர் சுந்தர் சி மீண்டுமொரு முறை தான் கமர்ஷியல் கிங் என்பதை நிருபித்துள்ளார். ஒட்டுமொத்த தமிழ் திரையுலகின் வெற்றியாக 2025ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது”, என்று பதிவிட்டுள்ளார்.

 

ஜெமினி ஃபிலிம் சர்க்கியுட் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, நிதின் சத்யா, சோனுசூட், முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் 'மதகஜராஜா'. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். கதாநாயகனாகிவிட்ட சந்தானத்தின் நகைச்சுவைதான் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என ரசிகர்கள் கருதுவதால் மீண்டும் அவர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என திரையுலக பிரபலங்கள் விரும்புகின்றனர். மீண்டும் சுந்தர் சியுடன் இணந்து சந்தானம் படம் நடிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்படுகிறது.

Share this story