ஜி.டி.நாயுடு பயோபிக்கில் நடிக்கும் மாதவன்... படப்பிடிப்பு தொடக்கம்...!

‘இந்தியாவின் எடிசன்’ என்று அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கைக் கதையில் மாதவன் நடிக்கிறார்.
விளம்பரப் படங்களை இயக்கியுள்ள கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி இயக்குகிறார். ராக்கெட்ரி படத்தைத் தயாரித்த வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் மூலன், வர்கீஸ் மூலன் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் சார்பில் ஆர்.மாதவன், சரிதா மாதவன் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கமலநாதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
விஜய் மூலன் கூறும்போது, “பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பைச் செய்த இந்தியர்களை இன்றைய தலைமுறை அறிந்துகொள்வதற்கான படங்கள் இப்போது தேவையாக இருக்கிறது. அப்படிப்பட்ட படமாக ‘ஜி.டி. நாயுடு- தி எடிசன் ஆஃப் இந்தியா’வை உருவாக்குகிறோம். இதில் மாதவன் தவிர முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். அவர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும். பெரும்பாலான படப்பிடிப்பு கோயம்புத்தூரில் நடக்கிறது.ஜெர்மனி உட்பட வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த இருக்கிறோம். முன் தயாரிப்பு பணிக்கு 2 வருடம் ஆகிவிட்டது. இந்த மாதம் கோயம்புத்தூரில் படப்பிடிப்பு தொடங்குகிறது. தலைப்பை வரும் 18-ம் தேதி அறிவிக்கிறோம்” என்றார்.