'கங்குவா' திரைப்பட ரிலீசுக்கு கிக்ரீன் சிக்னல் கொடுத்த உயர் நீதிமன்றம்...!

kanguva

நீதிமன்ற உத்தரவின்படி 1 கோடியே 60 லட்சம் ரூபாயை தலைமை பதிவாளர் பெயரில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் டெபாசிட் செய்ததையடுத்து கங்குவா திரைப்படத்தை திட்டமிட்டபடி நாளை (நவ.14) வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நடிகர் சூர்யா நடித்து வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' உள்ளிட்ட 3 திரைப்படங்களின் இந்தி டப்பிங் உரிமையை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திடம் இருந்து 6 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு சென்னையைச் சேர்ந்த ப்யூயல் டெக்னாலஜி என்ற நிறுவனம் வாங்கியிருந்தது.ஒப்பந்தத்தின் படி, இரண்டு படங்கள் இந்தியில் தயாரிக்கபடாததால் 5 கோடி ரூபாயை ப்யூயல் டெக்னாலஜி நிறுவனத்துக்கு திருப்பி செலுத்திய நிலையில், மீதமுள்ள 1 கோடியே 60 லட்சம் ரூபாயை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் திரும்ப வழங்கவில்லை.kanguva

அதனால், இந்த தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.11 கோடியாக திருப்பி வழங்காமல், கங்குவா படத்தை வெளியிட தடை விதிக்க கோரி ப்யூயல் டெக்னாலஜி நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.இந்த மனு நேற்றைய தினம் (நவ.12) நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், "இத்தனை ஆண்டுகள் காத்திருந்துவிட்டு, நவம்பர் 14ஆம் தேதி (நாளை) படம் வெளியாக உள்ள நிலையில் இந்த வழக்கு அவசரகதியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.kanguva

இதனை அடுத்து, வழக்கை தொடர்ச்சியாக விசாரித்த நீதிபதி, "ப்யூயல் டெக்னாலஜி நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய அசல் தொகையான 1 கோடியே 60 லட்சம் ரூபாயை சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும்" என்று ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். மேலும், பணத்தை டெபாசிட் செய்யாமல் படத்தை வெளியிடக்கூடாது எனவும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று (நவ.13) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ப்யூயல் டெக்னாலஜி நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய அசல் தொகையான 1 கோடியே 60 லட்சம் ரூபாயை (வட்டி சேர்க்காமல்) உயர்நீதிமன்ற பதிவாளர் பெயரில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் டெபாசிட் செய்தது. இதன் தொடர்ச்சியாக, திட்டமிட்டபடி கங்குவா படத்தை நாளை (நவ.14) வெளியிட அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Share this story