ராஜமௌலி - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் பிரமாண்ட படைப்பில் பாலிவுட் பிரபலம்!

magesh babu

ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் ப்ரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ’பாகுபலி’ திரைப்படம் மூலம் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் ராஜமௌலி. ’நான் ஈ’ திரைப்படம் மூலம் ராஜமௌலி தனது திறமையை நிரூபித்து இருந்தாலும், பாகுபலி திரைப்படம் ராஜமௌலியை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. இன்று வரை பாகுபலி திரைப்படத்தின் மேக்கிங் பெரிய அளவில் பேசப்படுகிறது.

பாகுபலி படத்தில் பிரபாஸ், ராணா உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் பெரிய அளவில் பாராட்டை பெற்றது. அதுவும் பாகுபலி திரைப்படம் நடிகர் பிரபாஸ் திரை வாழ்க்கையை மாற்றியது என கூறலாம். அப்படத்திற்கு பிறகு பிரபாஸ் இந்திய சினிமா அளவில் சூப்பர் ஹீரோ அந்தஸ்திற்கு உயர்ந்தார். பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் உலக அளவில் வசூல் சாதனை படைத்தது.இதனைத்தொடர்ந்து ராஜமௌலி ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற மற்றொரு பிரமாண்ட படைப்பை இயக்கினார். ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இரண்டு பெரிய ஹீரோக்கள் ராம் சரண், மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவருக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், உலக அளவில் 1200 கோடி இமாலய வசூல் செய்து சாதனை படைத்தது.


இதனைத்தொடர்ந்து அடுத்ததாக மகேஷ் பாபு நடிக்கும் படத்தை ராஜமௌலி இயக்குகிறார். இப்படத்திற்காக மகேஷ் பாபு தனது உடல் எடையை குறைத்துள்ள நிலையில், ராஜமௌலி இரண்டு வருடங்களாக ப்ரி புரொடக்‌ஷன்(pre production) பணிகளில் ஈடுபட்டுள்ளார். SSMB29 என அழைக்கப்படும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் எனவும், 2027ஆம் ஆண்டில் திரைக்கு வரும் என கூறப்படுகிறது. மேலும் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் நடிக்கவுள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. 'சலார்' படத்தில் பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். SSMB29 திரைப்படம் உலக அளவில் பிரமாண்ட வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story