விஜய்யின் ’ஜன நாயகன்’ படத்தில் மலையாள ராப் பாடகர்...!

விஜய் தற்போது நடித்து வரும் 'ஜன நாயகன்’ திரைப்படத்தில் கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் ஹனுமன்கைண்ட் பாடல் ஒன்றை பாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ’ஜன நாயகன்’. இது தான் விஜய்யின் கடைசி படம் இந்த படத்துடன் திரைத்துறையில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டே அறிவித்திருந்தார். அரசியல் பயணத்தில் முழுநேரமாக ஈடுபட இருப்பதால் இம்முடிவை எடுத்ததாக தெரிவித்திருந்தார்.ஹெச். வினோத் இயக்கும் இப்படத்தை கேவின் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ்ராஜ், நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். மேலும் ஸ்ருதி ஹாசன் கேமியோ ரோலில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.’ஜன நாயகன்’ திரைப்படமானது 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
இப்படத்தில் மலையாளத்தைச் சேர்ந்த ஆங்கில ராப் பாடகர் ஹனுமன்கைண்ட் பாடல் ஒன்றை பாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூரஜ் செருகத் எனும் இயற்பெயர் கொண்ட ஹனுமன்கைண்ட் கடந்த ஆண்டு பிக் டாக்ஸ் (Big Dawgs) பாடலை எழுதி இசையமைத்து வெளியிட்டார். முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் உருவாகியிருந்த ராப் பாடலான பிக் டாக்ஸ் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தியாவைத் தாண்டி ஹனுமன்கைண்ட் பிரபலமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து மலையாளத் திரைப்படங்களிலும் பாடல்கள் பாட ஆரம்பித்தார். ஃபகத் பாசிலின் நடிப்பில் வெளியான 'ஆவேஷம்' திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியிருந்தார். அது மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு வெளியான ரைஃபிள் கிளப் எனும் மலையாள திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்திருந்தார். தொடர்ந்து சமீபத்தில் ரன் இட் அப் (Run It Up) எனும் புதிய ஹிப்ஹாப் இசை பாடலை வெளியிட்டார். இந்திய பண்பாட்டு பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்த இந்த பாடலும் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். இப்பாடலும் உலகளவில் ரசிகர்களை பெரிதாக ஈர்த்தது. இந்நிலையில் விஜய்யின் ’ஜன நாயகன்’ திரைப்படத்தில் ஹனுமன்கைண்ட் பாடவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.