70வது தேசிய விருதைப் பெற்றுக் கொண்ட மணிரத்னம், சுபாஸ்கரன்

national award

 

இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா காரணமாக 2019 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் தள்ளி இந்த விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்டில் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் திரைப்படங்களில் பொன்னியின் செல்வன் 1 படத்துக்கு 4 தேசி விருதுகளும் திருச்சிற்றம்பலம் படத்திற்கு இரண்டு 2 தேசிய விருதுகளும் அறிவிக்கப்பட்டது. 

null




பொன்னியின் செல்வன் 1 படத்துக்காக சிறந்த தமிழ் திரைப்படம் பிரிவில் மணிரத்னத்துக்கும், சிறந்த பின்னணி இசை பிரிவில் ஏ.ஆர் ரஹ்மானுக்கும், சிறந்த ஒளிப்பதிவு பிரிவில் ரவி வர்மனுக்கும் சிறந்த ஒலி வடிவமைப்பு பிரிவில் ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டது. மேலும் திருச்சிற்றம்பலம் படத்துக்காக சிறந்த நடிகை பிரிவில் நித்யா மெனனுக்கும், சிறந்த நடன இயக்கம் பிரிவில் ஜானி மற்றும் சதீஷ் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ் பிரபலங்களான சண்டை இயக்குநர்கள் அன்பறிவுக்கு கே.ஜி.எஃப் 2 படத்திற்காக சிறந்த சண்டை பயிற்சிக்கான விருது அறிவிக்கப்பட்டது.

 


 


இந்த நிலையில் 70வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசு மாளிகையில் நடைபெற்றது. இதில் மணிரத்னம், ஏ.ஆர் ரஹ்மான், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், நித்யா மெனன், நடன இயக்குநர் சதீஷ் ஆகியோர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையால் தேசிய விருதுகளை வாங்கினர். பொன்னியின் செல்வன் 1 படத்தை சுபாஷ்கரனின் லைகா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


இந்த விழாவில் மணிரத்னம் விருது வாங்கும் போது குஷ்பு எழுந்து நின்று கைதட்டினார். மணிரத்னம் தற்போது வாங்கியுள்ள விருதையும் சேர்த்து இதுவரை 7 தேசிய விருது வாங்கியுள்ளார். அதே போல் ஏ.ஆர் ரஹ்மானும் 7 தேசிய விருதை வாங்கியுள்ளார். 

Share this story