'குடும்பஸ்தன்' படம் மூலம் ஹாட்ரிக் ஹிட் கொடுத்த மணிகண்டன்..!

மணிகண்டன் நடித்துள்ள குடும்பஸ்தன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார்.
நடிகர் மணிகண்டன் நடித்துள்ள ’குடும்பஸ்தன்’ திரைப்படம் வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார். சென்னையில் ரேடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கையை தொடங்கிய மணிகண்டன், டிவி சீரியல் மற்றும் திரைப்படங்களில் டப்பிங் பேசி வந்தார். டப்பிங் கலைஞராக ரஜினி, கமல், ஷாருக்கான் உள்ளிட்ட பல பிரபல நடிகர்களுக்கு டப்பிங் பேசியுள்ளதாக சமீபத்திய பேட்டியில் மணிகண்டன் கூறியுள்ளார்.
மேலும் சண்டைக் காட்சிகளில் சிறப்பு சப்தங்களும் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். டப்பிங் பேசி வந்த மணிகண்டனுக்கு பீட்சா 2 படத்தில் கதாசிரியராக வாய்ப்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து விக்ரம் வேதா, விஸ்வாசம், தம்பி, சில நேரங்களில் சில மனிதர்கள் ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். விக்ரம் வேதா பட வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது. தமிழ் சினிமாவில் பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்துள்ள மணிகண்டன், 2015இல் வெளியான ’இந்தியா பாகிஸ்தான்’ படத்தில் அறிமுகமானார்.
இதனைத்தொடர்ந்து விக்ரம் வேதா, காலா ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ’சில்லு கருப்பட்டி’ திரைப்படம் மூலம் மணிகண்டன் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு ’ஜெய்பீம்’ திரைப்படத்தில் மணிகண்டன் நடித்த ராஜாக்கண்ணு கதாபாத்திரம் அவரை ஒரு தேர்ந்த நடிகராக ரசிகர்கள் மனதில் நிலைநிறுத்தியது. இதனைத்தொடர்ந்து மணிகண்டன் இயக்கி நடித்த ‘நரை எழுதும் சுயசரிதம்’ திரைப்படம் சோனி லிவ் ஓடிடியில் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது.
அதுவரை மணிகண்டன் நடித்த படங்கள் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் மட்டுமே வரவேற்பை பெற்று வந்த நிலையில், குட் நைட், லவ்வர் ஆகிய படங்கள் மூலம் அனைத்து தரப்பு ஆடியன்ஸையும் கவர்ந்தார். தனுஷிற்கு பிறகு boy next door பிம்பத்துடன் ரசிகர்கள் விரும்பும் நடிகராக உருவெடுத்துள்ளார். தற்போது மணிகண்டன் நடித்துள்ள குடும்பஸ்தன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஒரு குடும்பஸ்தன் படும் கஷ்டங்களை நகைச்சுவையாக சொன்ன குடும்பஸ்தன் படத்தில் மணிகண்டன் நடிப்பு பாராட்டைப் பெற்று வருகிறது. இப்படத்தில் மண்கண்டன் தனது இயல்பான நடிப்பின் மூலம் ஆடியன்ஸ் மனதில் எளிதாக கனெக்ட் ஆகியுள்ளார். மேலும் குடும்பஸ்தன் திரைப்படம் மூலம் ஹாட்ரிக் ஹிட் கொடுத்து அசோக் செல்வன், ஹரீஷ் கல்யாண் வரிசையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார்.
மேலும் மணிகண்டன் யூடியூப் சேனலில் அளிக்கும் நேர்காணல்கள் நகைச்சுவையாகவும், சாமானிய மக்கள் தங்களை தொடர்பு படுத்தி கொள்ளும் அளவு இயல்பாக உள்ளதாகவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். ஒட்டுமொத்தமாக தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய நடிகராக மணிகண்டன் வளர்ந்து வருகிறார் என்று கூறினால் மிகையாகாது.