மணிகண்டன் நடிப்பில் கலகலப்பான ’குடும்பஸ்தன்’ பட டிரெய்லர்

manikandan

இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடிக்கும் 'குடும்பஸ்தன்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் மணிகண்டன். ஜெய்பீம் படத்தில் இவரது நடிப்பு முக்கியமாக கவனிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் கதாநாயகனாக நடித்து வெளியான ’குட் நைட்’, ’லவ்வர்’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது ‘குடும்பஸ்தன்’ என்கிற படத்தில் நடித்துள்ளார் மணிகண்டன்.

தமிழ் யுடியூப் சேனல்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட நக்கலைட்ஸ் சேனல் குழுவினர் இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். யுடியூப் சேனலில் இருந்து குழுவாக அப்படியே சினிமாவில் நுழைந்து படம் உருவாக்குவது இதற்கு முன்பும் சில யுடியூப் சேனல்கள் செய்துள்ளன. அதன்படி நக்கலைட்ஸ் சேனலைச் சேர்ந்த ராஜேஷ்வர் காளிசாமி இந்த படத்தை இயக்குகிறார். சுயாதீன இசைக்கலைஞர் வைசாக் இசையமைக்கிறார்.

மணிகண்டனைத் தவிர முக்கிய கதாபாத்திரங்களில் குரு சோமசுந்தரம், இயக்குனர் சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் மேக்னா சான்வே, தனம் அம்மா, பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், நிவேதிதா, முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் ’குடும்பஸ்தன்’ படத்திலிருந்து ’ஜீரோ பேலன்ஸ் ஹீரோ’, ’கண்ணை கட்டிக்கிட்டு’ என இரு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படத்தை சினிமாகாரன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

இதையடுத்து ’குடும்பஸ்தன்’ திரைப்படம் குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்காக படக்குழு தீவிரமாக புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் கோயம்புத்தூரில் நடந்த பட புரோமோஷன் நிகழ்வில் மணிகண்டன், “நடிகர் அஜித் பல தலைமுறைகளுக்கும் இன்ஸ்பிரேஷன். அவர் என்றுமே தனக்கு விருப்பமான விஷயத்தை கைவிட்டதில்லை. அதற்கான பலன்கள் அவருக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இலக்குகளை அடைய தொடர்ந்து உழைத்தால் ஒருநாள் வெற்றி கிடைக்கும் என்பதற்கு அவர் உதாரணம்” எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இத்திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. புதிதாக திருமணம் செய்து குடும்ப தலைவனாக மாறக்கூடிய இளைஞனின் பொருளாதார சிக்கல்களையும் குடும்ப சிக்கல்களையும் நகைச்சுவையாக கலகலப்பாக சொல்லும் படமாக ’குடும்பஸ்தன்’ இருக்கும் என டிரெய்லர் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. டிரெய்லர் முழுக்க குடும்பஸ்தன் எப்படி உருவாகிறான் என நகைச்சுவையாக சொல்லியுள்ளனர். படம் குறித்த எதிர்பார்ப்பை டிரெய்லர் அதிகரித்துள்ளது.

Share this story