கவனம் ஈர்க்கும் மணிகண்டனின் ‘குடும்பஸ்தன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

manikandan

மணிகண்டன் நடிக்கும் ‘குடும்பஸ்தன்’ படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘ஜெய்பீம்’, ‘குட் நைட்’ உட்பட பல படங்களில் நடித்தவர் மணிகண்டன். அவர் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படத்தை ‘நக்கலைட்ஸ்’ ராஜேஷ்வர் காளிசாமி இயக்குகிறார். சினிமாகாரன் எஸ்.வினோத்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் கதையை, பிரசன்னா பாலச்சந்திரனும் ராஜேஷ்வர் காளிசாமியும் எழுதியுள்ளனர். திரைக்கதை, வசனத்தைப் பிரசன்னா பாலச்சந்திரன் எழுதியுள்ளார். சுஜித் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு வைஷாக் இசை அமைக்கிறார். சான்வி மேக்னா நாயகியாக நடிக்கிறார். குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

 manikandan
இந்நிலையில், இப்படத்துக்கு ‘குடும்பஸ்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு குடும்பஸ்தனாக பல்வேறு வேலைகளை செய்யும் மணிகண்டனின் வேலைப்பளுவை குறிப்பிடும் வகையில் சுவாரஸ்யமாக வடிவமைக்கப்பட்டுள்ளது போஸ்டர். ‘குட்நைட்’ படத்துக்குப் பிறகு மீண்டும் ஃபேமிலி ஆடியன்ஸை நோக்கி திரும்பியுள்ளார் மணிகண்டன்.


படம் குறித்து இயக்குநர், ராஜேஷ்வர் காளிசாமி கூறும்போது, “இந்தக் கதையை சில வருடங்களுக்கு முன்பே உருவாக்கிவிட்டோம். இதில் மணிகண்டன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அவரிடம் சொன்னோம். ஸ்கிரிப்டை படித்து விட்டு பத்து நாளில் சொல்கிறேன் என்றார். அவருக்கும் பிடித்திருந்தது. இப்போது படப்பிடிப்பைத் தொடங்குகிறோம். ஒரு மிடில் கிளாஸ் இளைஞன் தினமும் குடும்பத்தை நடத்துவதே அட்வெஞ்சர் போல இருக்கிறது. இதுதான் ஒன்லைன். குடும்பப் பின்னணியில் உருவாகும் காமெடி கதை.மணிகண்டனுக்கு இயல்பான காமெடி, நன்றாக வரும். அதனால் இந்தக் கதையில் அவர் மிரட்டுவார். கோயம்புத்தூர் பின்னணியில் படம் உருவாகிறது. படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது” என்றார்

Share this story