மணிகண்டன் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியானது!

manikandan

இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடிக்கும் 'குடும்பஸ்தன்' படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் மணிகண்டன். இவரது நடிப்பில் வெளியான குட் நைட், லவ்வர் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும், ஜெய் பீம் படத்தில் இவரது நடிப்பு அனைவரின் மத்தியிலும் பேசப்பட்டது. இந்நிலையில் இவரது பிறந்தநாளான நேற்று இவர் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது.

அதன்படி, இப்படத்தை இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்க, சினிமாகாரன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு குடும்பஸ்தன் என பெயரிடப்பட்டுள்ளது. படம் குறித்து இயக்குநர் ராஜேஷ்வர் கூறும்போது, “கோயம்புத்தூரில் இருக்கும் புதிதாக திருமணமான தம்பதிகள் பற்றிய மகிழ்வான கதை இது. குடும்பஸ்தன் ஒருவன் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வேடிக்கையான தருணங்களை சுற்றி இந்தக் கதை நடக்கிறது” என்றார்.


இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் விரைவில் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், ’ஜெய ஜெய ஜெய ஹே’ படப்புகழ் கனகம்மா, ஜென்சன் திவாகர் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படமும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story