விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் மணி ரத்னம் படம் -என்ன டைட்டில் தெரியுமா ?
கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடித்த ‘தக் லைஃப்’ என்ற படத்துக்கு பிறகு மணிரத்னம் எழுதி இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கின்றனர். முன்னதாக ‘செக்கச் சிவந்த வானம்’ என்ற படத்தில், மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். மணிரத்னம் இயக்கத்தில் சாய் பல்லவி நடிக்கும் முதல் படம் இது. காதலை மையமாக வைத்து உருவாக்கப்படும் இப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்க, லைகா புரொடக்ஷன்ஸ் வழங்குகிறது. மணிரத்னத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் ‘புரொடக்ஷன் நம்பர் 23’ என்ற தற்காலிக பெயருடன் தொடங்கியது. கொல்கத்தாவில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடித்த ஒரு காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது.இந்நிலையில், நேற்று டைட்டில் வெளியீடு குறித்த வீடியோ வெளியிடப்பட்டது. இதில் சாய் பல்லவி, ‘நீ இஞ்சி... நான் வெல்லம்’ என்றும், ‘நான் வெல்லம்... நீ இஞ்சி’ என்றும் சொன்னார். உடனே விஜய் சேதுபதி, ‘இஞ்சி வெல்லம்’ என்றார். பிறகு இருவரும் மழையில் நனைந்திருக்கும் ஒரு போட்டோ வெளியானது. இதையடுத்து ‘இஞ்சி வெல்லம்’ என்ற தலைப்பு உறுதி செய்யப்பட்டது.

