’மஞ்சும்மல் பாய்ஸ்’ வெளியாகி ஓராண்டு நிறைவு.. ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட படக்குழு...

MM

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்தின் குணா குகை செட் உருவான விதத்தை படக்குழு வீடியோவாக வெளியிட்டுள்ளது
 

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி வெளியாகி மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம் ’மஞ்சும்மல் பாய்ஸ்’ (Manjummel Boys). மலையாள திரைப்படமான ’மஞ்சும்மல் பாய்ஸ்’ வெளியாகி ஓராண்டை நிறைவு செய்ததையொட்டி அப்படக்குழு பிரத்யேகமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய கலை இயக்கத்தை பற்றியும் அதற்கு பின்னால் உள்ள உழைப்பு பற்றியும் வீடியோ  வெளியாகியுள்ளது. mm

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ’மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம், கேராளவில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக தமிழ்நாட்டில் மிக அதிகளவிலான ரசிகர்களைப் பெற்ற படமாக மாறியது. இதுவரை இல்லாத அளவில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த மலையாளப் படமாகவும் மஞ்சும்மல் பாய்ஸ் சாதனை படைத்தது. கேரளாவில் இருந்து கொடைக்கானலைச் சுற்றி பார்க்க வரும் நண்பர் கூட்டம். அங்கே குணா குகையின் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சென்று பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார்கள். குணா குகைக்குள் இருக்கும் ‘சாத்தானின் சமையலறை’ எனக் கூறப்படும் பல அடிகள் ஆழமுள்ள குழிக்குள் விழுந்த நண்பனை மீட்க போராடும் நண்பர்கள் குழுவின் கதையாக உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தியிருக்கும் படமே `மஞ்சும்மல் பாய்ஸ்'.

பதைபதைக்க வைக்கும் சர்வைவல் த்ரில்லரான இத்திரைப்படத்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றியது கொடைக்கானல் குணா குகையும் இளையராஜாவின் ’கண்மணி அன்போடு’ பாடலும்தான். படத்தில் குணா குகையை காட்சிப்படுத்தியிருந்த விதம் குணா குகைக்குள்ளாகவே நாமும் இருப்பதான உணர்வை ஏற்படுத்தியது.mm

பலரும் உண்மையான குணா குகையில் தான் இந்த படத்தை எடுத்தார்களா? என்ற அளவிற்கு எண்ணும் வகையில் அது இருந்தது. ஆனால் உண்மையில் குணா குகைக்குள் செல்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லலாதது, மேலும் குணா குகைக்குள் அவ்வளவு பேரை வைத்து படப்பிடிப்பு நடத்துவது இயலாத காரணம் போன்றவற்றால் குணா குகையை முழுக்க செயற்கையாக செட் மூலம் உருவாக்ககியுள்ளனர். இதனை விளக்கும் அந்த வீடியோவே தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


உண்மையான குணா குகையை சென்று பார்வையிட்ட படக்குழு இத்தகைய கஷ்டமான இடத்தில் எப்படி ’குணா’ படத்தை எடுத்தார்கள் என அந்த படத்தின் இயக்குநர் சந்தான பாரதி, ஒளிப்பதிவாளர் வேணு ஆகியோர் மீது மிகப்பெரிய மரியாதை வந்ததாக மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் அந்த வீடியோவில் கூறுகிறார்.மேலும் நடிகர்கள் கொடைக்கானலின் குளிரை உணருவதற்காக படப்பிடிப்பு தளம் முழுவதும் அதிகளவில் ஏசியைப் பயன்படுத்தியதாகவும் அதனை இந்த செட்டிற்குள் ஆங்காங்கே மறைத்து வைத்திருந்ததாகவும் அவர் கூறினார். முழுக்க முழுக்க பிரமிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் இந்த குணா குகை செட் போடப்பட்டு மஞ்சும்மல் பாய்ஸ் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.

சௌபின் ஷாகிர், ஶ்ரீநாத் பாஸி, பாலு வர்கீஸ், கணபதி, தீபக் பரம்போல் ஆகியோருடன் தமிழ் நடிகர்களான ராமச்சந்திரன் துரைராஜ், ஜார்ஜ் மரியம் போன்றோரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். பரவா ஃபிலிம்ஸ் (Parava Films) 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில், தயாரித்திருந்த இந்த திரைப்படமானது கிட்டத்தட்ட 250 கோடி ரூபாய் வசூலை குவித்தது.

Share this story