மஞ்சும்மல் பாய்ஸ் விவகாரத்தில் இழப்பீடு பெற்றாரா இளையராஜா?

ilayaraja


மஞ்சும்மல் பாய்ஸ் பட விவகாரத்தில் இளையராஜாவுக்கு தயாரிப்பாளர் தரப்பு பணம் கொடுத்துவிட்டதாக பரவும் தகவல் குறித்து இளையராஜா தரப்பு வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில், நடிகர் கமல் நடித்து 90களில் வெளியான குணா படத்தின் 'கண்மணி அன்போடு காதலன்' என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இந்தத் திரைப்படம், உலகம் முழுவதும் 200 கோடிக்கு அதிகமாக வசூல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டு இருந்த 'கண்மணி அன்போடு காதலன்' பாடல் படத்திற்கு ஒரு உணர்ச்சியாக அமைந்து இருந்தது.

Manjummal boys

ஆனால், இந்த பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக மஞ்சும்மல் பாய்ஸ் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸில், “பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் பதிப்புரிமை சட்டப்படி பாடலின் முழு உரிமையாளர் என்பதால், முறையாக உரிமை பெற்று பாடலை பயன்படுத்த வேண்டும் அல்லது பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும், பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து, முறையான அனுமதி பெற்றுதான் பாடல் பயன்படுத்தியதாக மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பு தரப்பு, இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்திருந்தது. இந்த நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் பாடல் தொடர்பாக இளையராஜாவின் பிரச்சினை முடித்து வைக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின.

அதேபோல், இளையராஜா தரப்பில் ரூ.2 கோடி இழப்பீடு கேட்கப்பட்டதாகவும், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து ரூ.60 லட்சம் கொடுக்கப்பட்டு இந்த பிரச்னை முடிவுக்கு வந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால்,  தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இளையராஜாவுக்கு பணம் கொடுக்கப்படவில்லை என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.

இதேபோல், "நாங்கள் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு இழப்பீடு வழங்க வேண்டிய அவசியம் கிடையாது என்றும்,  எங்கள் படத்தில் பயன்படுத்தப்பட்ட 'கண்மணி அன்போடு காதலன்' பாடலை மியூசிக் மாஸ்டர் ஆடியோ அண்ட் வீடியோ, எல்.எல்.பி என்ற நிறுவனத்திலிருந்து பெற்றுள்ளதாவும்
தெலுங்கு பாடலை ஸ்ரீதேவி மியூசிக் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திடம் பெற்றுள்ளதாவும் இதுவரை இளையராஜாவிற்கு நாங்கள் எந்த ஒரு இழப்பீடு தொகையும் வழங்கவில்லை” எனவும், மஞ்சுமல் பாய்ஸ் படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

Share this story