பாக்யராஜ் இயக்கிய 'சின்ன வீடு' படத்தின் மாடர்ன் பார்மட் தான் 'மன்மத லீலை'... இயக்குனர் வெங்கட் பிரபு!
'சின்ன வீடு' படத்தின் நவீன வடிவம் தான் மன்மதலீலை என்று இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த 'மாநாடு' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. மாநாடு வெற்றியை அடுத்து வெங்கட் பிரபுவின் அடுத்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், வெங்கட் பிரபுவின் அடுத்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெங்கட்பிரபுவின் 10-வது படமான இந்தப் படத்திற்கு ‘மன்மதலீலை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அசோக்செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்கிறார்.

வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்த மணிவண்ணன் என்பவர் இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ளார். ‘மன்மதலீலை‘ திரைப்படம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு கூறுகையில், “இந்தப் படம் மிகவும் நகைச்சுவையாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும். திருமணத்துக்கு பிந்தைய காதலைச் சுற்றி நடக்கும் கதையைக் கண்ட ஜாலியான படம். இந்தப் படம். 1980-களில் கே.பாக்யராஜ் இயக்கிய ‘சின்ன வீடு‘ படத்தின் நவீன வடிவமாகவும், பார்வையாளர்களுக்கு புதுவித திரைக்கதை அனுபவத்தை தருவதாக இருக்கும். ஒரு இளைஞனின் வாழ்க்கையில் வெவ்வெறு காலக்கட்டங்களில் நடக்கும் இரண்டு முக்கிய சம்பவங்களைப் பற்றிய கதை இது.
ஊரடங்கு நேரத்தில், இந்தக் கதை பற்றி எனது உதவி இயக்குநர் மணிவண்ணனும், நானும் கலந்துரையாடினோம். அப்போது மிகவும் ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்தக் கதை இருந்ததால், இதனை ஸ்கிரிப்ட்டாக மாற்றுமாறு அவரிடம் கூறினேன். நகைச்சுவை மட்டுமின்றி, ‘மன்மதலீலை‘ படத்தில், கதாநாயகன் கடைசியில் சிக்குவாரா, சிக்கமாட்டாரா என்ற த்ரில்லரும் நிறைந்திருக்கும். மேலும், ‘மாநாடு‘ படத்திற்கான பணிகள் செய்துகொண்டிருந்தபோதே, இந்தப்படத்தை எடுத்து முடித்துவிட்டோம்” என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்

