“மனித வாழ்வின் ஏக்கமே பெரும் ப்ரியத்தில் உருகி வழிவது தான்” - மாரி செல்வராஜ் பாராட்டு
96 பட இயக்குநர் ச.பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அர்விந்த் சுவாமி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘மெய்யழகன்’. சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்துள்ள இப்படத்தில் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஸ்ரீ திவ்யா கதாநாயகியாக நடித்திருக்க ராஜ்கிரண், ஜெயபிரகாஷ், தேவதர்சினி சுகுமாரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் நேற்று(27.09.2024) வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வரும் நிலையில், இப்படத்தின் வெற்றிக்கு தனுஷ், விஜய் மில்டன், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர். மேலும் இப்படத்தை பார்த்த லிங்குசாமி, விஷ்ணு விஷால், அல்போன்ஸ் புத்ரன், பாண்டிராஜ் உள்ளிட்டோர் படக்குழுவினரை பாராட்டி இருந்தனர்.
இந்த நிலையில் மாரி செல்வராஜ், ‘மெய்யழகன்’ படத்தை தற்போது பாராட்டியுள்ளார். இது தொடர்பான அவரின் எக்ஸ் தள பதிவில், “மெய்யழகன் பார்த்தேன். மனித வாழ்வின் ஏக்கமே பெரும் ப்ரியத்தில் உருகி வழிவது தான் என்பதை எந்த சமரசமும் இல்லாமல் நிரூபித்து இருக்கிறார்கள். சாத்தியப்படுத்திய படக்குழுவினருக்கு என் வாழ்துகளும் ப்ரியமும்” என்று கூறியுள்ளார். மாரி செல்வராஜ் தற்போது வாழை பட வெற்றிக்குப் பிறகு தற்போது துருவ் விக்ரமை வைத்து ‘பைசன்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.