“என்னுடைய உச்சபட்ச கண்ணீர் இந்த படம்” - ‘வாழை’ குறித்து மாரி செல்வராஜ் உருக்கம்

mari selvaraj


“என்னுடைய உச்சபட்ச கண்ணீர் என்றால் அது ‘வாழை’ தான். என்னதான் இவனுக்கு பிரச்சினை என்று நினைப்பவர்களுக்கு நானே என்னை பற்றி சொல்கிறேன் என்று எடுத்தப் படம்தான் இது” என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
`பரியேறும் பெருமாள்' படத்தை இயக்கி தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துக் கொண்டவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் 'கர்ணன்' மற்றும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த 'மாமன்னன்' திரைப்படத்தை இயக்கினர். மாமன்னன் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் தற்போது 'வாழை' என்ற படத்தை தயாரித்து, இயக்கி உள்ளார். இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வரிசையில், இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னையில் நடந்த ‘வாழை’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது: “வாழை’ படத்துக்குப் பிறகு நான் என்னுடைய ‘பெஸ்ட்’ ஆக ஒரு படம் பண்ணாலும் நான் ‘வாழை’ படத்தைத்தான் என்னுடைய சிறந்த படமாக பார்ப்பேன். என்னுடைய உச்சபட்ச கண்ணீர் என்றால் அது ‘வாழை’ தான். என்னதான் இவனுக்கு பிரச்சினை என்று நினைப்பவர்களுக்கு நானே என்னை பற்றி சொல்கிறேன் என்று எடுத்தப் படம்தான் இது. என்னுடைய வலியை, என்னுடைய பரிதவிப்பை, என்னுடைய அழுகையை நான் என் இயக்குநர் ராமிடம் சொல்லும்போது, இதுதான் கலை என்று எனக்கு உணர்த்தியர் அவர். அவருக்கு இந்த படத்தை அர்ப்பணிக்கிறேன்” இவ்வாறு மாரி செல்வராஜ் பேசினார். வாழை திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Share this story