‘என்னை இழுக்குதடி...’ மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஏ.ஆர் ரஹ்மான் பாடல்
பிரதர் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி தற்போது புவனேஷ் அர்ஜூனன் இயக்கும் ஜீனி படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக டாடா பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து முடித்துள்ளார். படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடைக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மெனன் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, வினய், லால், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதன் விளைவாகத் தான் கடந்த ஆண்டு இதே மாதத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக்கில் நித்யா மெனன் பெயரை முதலில் குறிப்பிட்டு அடுத்ததாக ஜெயம் ரவி பெயரை குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தப் படத்தின் முதல் பாடலான ‘என்னை இழுக்குதடி...’ பாடல் நேற்று மாலை வெளியானது. இப்பாடலை ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் தீ ஆகியோர் பாடியுள்ளனர். விவேகா வரிகள் எழுதியுள்ளார். வழக்கம் போல் ரஹ்மானின் துள்ளல் கலந்த இசையுடன் காதல் பாடலாக வெளியாகியுள்ள இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் யூட்யூபில் வெளியான இப்படலின் வீடியோ தற்போது வரை மில்லியன் பார்வையாளர்களை கடந்து டாப் 5 ட்ரெண்டிங் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது.