மிர்ச்சி சிவா நடிப்பில் உருவான ‘சூது கவ்வும் 2’ ட்ரைலர் வெளியானது
நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் ‘சூது கவ்வும்’. இப்படத்தின் வெற்றியையடுத்து சி.வி.குமார் தயாரிப்பில் எஸ்.ஜே.அர்ஜூன் இயக்கத்தில் சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகனாக மிர்ச்சி சிவா நடித்திருக்க அவருடன் இணைந்து கருணாகரன், ராதா ரவி, வாகை சந்திரசேகர், எம்.எஸ்.பாஸ்கர், ஹரீஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திலிருந்து முன்னதாக ஃபர்ஸ் லுக் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படம் வருகிற டிசம்பர் 13ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன் பிறகு படக்குழு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடத்தி படத்திற்கான புரமோஷன் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சூது கவ்வும் 2 படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது, அதில் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் தொடர்பு இருக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அரசியல், ஆள் கடத்தல் என விறுவிறுப்பாக நகரும் ட்ரைலரில் முதல் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு ஏற்பட்ட விபத்தைப் பார்த்து ரிவெஞ்ச் எடுப்பதாக மிர்ச்சி சிவா கூறுகிறார். பின்பு அடுத்தடுத்து துப்பாக்கி உடன் கூடிய சண்டைக் காட்சிகளுடன் முடிவடைகிறது.