புதுமுகங்களுடன் மொத ராத்திரி பட இயக்குனரின் அடுத்த படம்
அறிமுக இயக்குனர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.வெங்கடேஷ், பகவதி பெருமாள் உள்பட பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி வெளியான படம் ‘மொத ராத்திரி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படம் பெண்கள், குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒடிடியில் வெளியான பிறகும் ஒரு சில நாட்கள் திரையரங்கில் கூட்டம் காணப்பட்டது.
இந்நிலையில் ‘மொத ராத்திரி’ படத்தின் வெற்றி குறித்து பேசிய இயக்குனர் ராஜா கருப்பசாமி, ‘இப்படம் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றியை பெற்றிருக்கிறது.
இதில் நான் நடித்தது பற்றி பலர் கேட்கிறார்கள். எனக்கு நடிப்பு ஆசை இருந்தது. இருந்தாலும் நான் நடித்த கேரக்டரில் வேறொரு நடிகரைத்தான் பேசி வைத்திருந்தோம். பட்ஜெட் உள்ளிட்ட விஷயங்களால் கடைசி நேரத்தில் அவரை நடிக்க வைக்க முடியவில்லை. அதனால் நான் நடிக்க வேண்டியதாகிவிட்டது. அடுத்து சில வாய்ப்புகள் வந்திருக்கின்றன. அடுத்து நான் இயக்கும் படமும் ஊர் கதையாகத்தான் இருக்கும். அதில் புதுமுகங்கள் நடிக்க இருக்கிறார்கள். அதற்கான வேலையை தொடங்கிவிட்டோம்’ என்றார்.

