“இந்தியா முழுவதும் பேசும் படமாக...” - மோகன் ஜி கொடுத்த அடுத்தப் பட அப்டேட்
தன்னுடைய புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு தீபாவளிக்கு வெளியாகும் எனவும், டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்குகிறது. தீபாவளிக்கு படத்தின் டைட்டில் வெளியாகும். நானும், ரிச்சர்ட்டும் மீண்டும் இணையும் படம் இது. எங்களுடைய சக்திக்கு மீறிய படம் இது. மிகவும் புதிதாக இருக்கும். இந்தியா முழுவதும் பேசும் படமாக இது இருக்க வேண்டும் என நினைத்து பணியாற்றி வருகிறோம். தற்போது படத்தின் நாயகிக்கான தேர்வு நடைபெறுகிறது. விரைவில் அப்டேட் வரும். படமாக எடுக்கும் அளவுக்கு என்னுடைய வாழ்வில் எந்த பெரிய கன்டென்டும் இல்லை. வழக்கமான வாழ்க்கை தான் என்னுடையது” என்றார்.
புதிய படத்துக்கான காலதாமதம் குறித்து பேசுகையில், “ஒரு வருட இடைவெளிக்கு காரணம், பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் அட்வான்ஸ் வாங்கியிருந்தேன். ஆனால் படம் ஆரம்பிக்க தாமதம் ஆனது. அதனால் படம் பண்ண முடியாமல் இருந்தேன். தற்போது என்னுடைய ஸ்டைலில் ஒரு படம் பண்ணிவிட்டு வருகிறேன் என்று வந்து விட்டேன்” என்றார். ஹேமா கமிட்டி குறித்து பேசுகையில், “தமிழ் சினிமாவிலும் இந்தப் பிரச்சினை உள்ளது. யாரும் வெளிப்படையாக பேச மாட்டார்கள். என்னை சந்தித்த நடிகைகள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். பெண்களுக்கு இருப்பது போல, ஆண்களிடம் பணம் வாங்கி நடிக்க வைப்பதாக கூறி ஏமாற்றி இருக்கிறார்கள். மலையாளத்தைப் போல தமிழ் திரையுலகிலும் பிரச்சினை இருப்பது உண்மைதான். இல்லை என சொல்வது பொய். நம்பாதீர்கள்” என்றார்.
அவர் மேலும் பேசுகையில் , “தி கோட் படம் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வெங்கட் பிரபு சிறப்பாக படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் விஜயகாந்தை ‘ஏஐ’யில் உருவாக்கியிருப்பதை போல எனக்கு நடிகர் சிவாஜி கணேசனை ஏஐ-யில் உருவாக்க வேண்டும் என ஆசை. அவரை மொத்த திரையுலகமும் மிஸ் செய்கிறது. அவரைப் போன்ற ஒரு நடிகர் இன்று இல்லை. விஜய் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் தான். ஆனால், விஜய்யும் தவறான பாதையில் செல்கிறாரோ என்ற வருத்தம் உள்ளது. காரணம், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதது, ஓணத்துக்கு வாழ்த்து சொன்னது வருத்தம் தான். விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்வது வேறு. பாஜகவுக்கு ஆதரவளிப்பது வேறு. இரண்டையும் ஒன்றாக பார்க்கும் மனநிலையை விடுங்கள். அப்போது தான் பலரும் வெளிப்படையாக வாழ்த்து தெரிவிப்பார்கள்” என்றார்.