பாலியல் விவகாரம்; அடுக்கடுக்கான கேள்விகள் - திணறிய மோகன்லால்
மலையாளத் திரையுலகில் பாலியல் ரீதியான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்திய திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரபல நடிகை ஒருவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பாலியல் கொடுமை அரங்கேறியது. இந்த சம்பவத்தின் விளைவாக படப்பிடிப்பில் ஈடுபடும் நடிகைகள், பெண்கள் என அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது, இந்த குழுவின் ஆய்வறிக்கை அம்மாநில முதல்வரிடம் 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை வெளியாகாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்த ஆய்வறிக்கை வெளியானதை தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை பொதுவெளியில் தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் நடிகை ஸ்ரீலேகா மித்ரா அளித்த புகாரில் இயக்குநர் ரஞ்சித் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதில் ரஞ்சித் குற்றத்தை மறுத்து, தனது மலையாள சினிமா அகடாமி தலைவர் பொறுப்பிலிருந்து விலகியிருந்தார். நடிகை ரேவதி சம்பத் நடிகர்கள் சித்திக், ரியாஸ் கான் ஆகியோர் மீது அளித்த புகாரில் சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் இருவரும் குற்றத்தை மறுக்க, சித்திக் தனது நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகினார். நடிகை மினுமுனீர் அளித்த புகாரில் நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ஜெயசூர்யா மீது மேலும் ஒரு நடிகை புகார் கொடுத்ததால் அவர் மீது இரண்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த பாலியல் புகார்கள் தொடர்பாக அம்மாநில அரசு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் புகார் கூறிய நடிகைகளிடம் வாக்குமூலம் பெற்று சம்மந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வருகிறது. இதனிடையே தேசிய மகளிர் ஆணையம் ஒரு வாரத்திற்குள் ஹேமா கமிட்டி ஆய்வறிக்கையின் முழு வடிவத்தையும் வழங்கக் கோரி கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. பாலியல் குற்றங்கள் தொடர்ந்து எழுந்து வந்ததால் மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் மோகன்லால் உட்பட 17 செயற்குழு உறுப்பினர்கள் கூண்டோடு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்தனர். மேலும் அம்மா அமைப்பை கலைத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அம்மா அமைப்பின் முன்னாள் தலைவர் மோகன்லால் தற்போது மௌனம் கலைத்துள்ளார். கேரள கிரிக்கெட் லீக் போட்டி தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கலந்து கொண்ட போது ஹேம கமிஷன் அறிக்கை தொடர்பான விவகாரம் குறித்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அவர் பேசுகையில், “அம்மா அமைப்பில் இரண்டு முறை தலைவராக இருந்திருக்கிறேன். ஆனால் இது போன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்ததில்லை. என்னுடைய மனைவி மருத்துவமனையில் உள்ளார். அந்த காரணத்தினால் தான் செய்தியாளர்களை சந்திக்க முடியவில்லை. நான் இங்கே தான் இருக்கிறேன். எங்கேயும் ஓடி ஒளியவில்லை. மலையாள திரைத்துறையில் 21 சங்கங்கள் இருக்கும்போது அம்மா-அமைப்பை மட்டும் குறை கூற வேண்டாம். எல்லாவற்றுக்கும் அம்மா அமைப்பை குறைக் கூறுவது சரியல்ல.
மலையாள திரையுலகம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். பாலியல் புகார் தொடர்பாக அரசு தன் கடமையை செய்யும் என நம்புகிறேன். அம்மா அமைப்பு மீது அவதூறு பரப்பாதீர்கள். இந்த பிரச்சனையில் இருந்து மலையாள திரையுலகம் காக்க பட வேண்டும். வயநாடு போன்ற பேரிடர்களின் போது தொடர்ந்து மக்களுக்கு அம்மா அமைப்பு பல உதவிகளை செய்துள்ளது. பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக அனைத்து துறைகளிலும் மாற்றம் தேவைப்படுகிறது. பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சைகளுக்கு ஒட்டுமொத்த கேரள திரையுலகமும் பதில் சொல்லும். இந்த புகார்களால் மலையாள திரையுலகில் உள்ள கடைநிலை தொழிலாளர்கள் பாதிக்கப்படக் கூடாது. நீதிமன்றத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து நான் பேச முடியாது.
இந்த புகார்கள் தொடர்பாக அரசும் நீதிமன்றமும் தங்கள் கடமைகளை செய்கின்றன. இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு முழுமையாக நான் ஒத்துழைப்பேன். குழு கலைக்கப்பட்டாலும் அம்மா சங்கத்தின் செயல்பாடுகளில் பாதிப்பு இல்லை. ஹேமா கமிட்டி அறிக்கையை நான் முழுமையாக படிக்கவில்லை. யார் தவறு செய்தாலும் கண்டிப்பாக தண்டனை பெற்றாக வேண்டும்” என்றார். இதனிடையே செய்தியாளர்கள் இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு கேள்விகளை அடுக்கினர். அதற்கு பதில் சொல்லாமல் திணறினார் மோகன்லால்.