மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ திட்டமிட்டபடி வெளியாகும் என அறிவிப்பு

empuran

மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘லூசிஃபர்’. இதன் இரண்டாம் பாகத்துக்கு ‘எம்புரான்’ என தலைப்பிட்டு பணிகள் தொடங்கப்பட்டன. முதல் பாகத்தில் நடித்த அனைத்து நடிகர்களுமே இதிலும் நடித்துள்ளனர். அவர்களோடு சில முன்னணி நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.  மார்ச் 27-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட படம் ‘எம்புரான்’. இதனை லைகா நிறுவனம் மற்றும் மோகன் லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தற்போது லைகா நிறுவனம் மிகவும் கடினமான சூழலில் இருப்பதால், இப்படத்தினை திட்டமிட்டப்படி வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது.


‘லூசிஃபர்’ படத்தின் 2-ம் பாகம் என்பதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இதனால், இப்படத்தினை வெளியிட பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. இறுதியாக இப்படத்தில் லைகா நிறுவனம் முதலீடு செய்த பணம் அனைத்தையும் கோகுலம் மூவிஸ் நிறுவனம் கொடுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அந்நிறுவனம் தான் வெளியீட்டிற்கான அனைத்து பணிகளையும் கவனித்து வருகிறது.


இனி வரக்கூடிய போஸ்டர்கள் அனைத்திலும் கோகுலம் மூவிஸ், லைகா நிறுவனம் மற்றும் ஆசிர்வாத் சினிமாஸ் என 3 நிறுவனங்கள் பெயர் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. முதலில் இருந்தே லைகா நிறுவனத்தின் பங்கீடு இருப்பதால், அந்நிறுவனத்தின் பெயரும் இடம்பெறுகிறது.  இன்னும் சில தினங்களில் படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்படவுள்ளது. இதன் தணிக்கைப் பணிகள் அனைத்தும் முடிவுற்று, வெளியீட்டு தயாராகியுள்ளது. இந்நிலையில், படம் திட்டமிட்டப்படி மார்ச் 27-ம் தேதி வெளியாகும் என்று பிருத்விராஜ் அறிவித்துள்ளார்.
 

Share this story

News Hub