’மூக்குத்தி அம்மன் 2’ : ஒரு மாதம் விரதம் இருந்து நடிக்கும் நயன்தாரா !

nayanthara

சுந்தர்.சி இயக்கத்தில் ’மூக்குத்தி அம்மன் 2’ நடிக்கவுள்ள நயன்தாரா ஒரு மாதம் விரதம் இருந்து நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவுள்ள திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 2020ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியான திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. ஜனரஞ்சகமான காமெடி திரைப்படமாக உருவான மூக்குத்தி அம்மன் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


இப்படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாராவின் நடிப்பும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து ’மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் உருவாகிறது. சுந்தர்.சி இயக்கும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை இன்று கோயில் செட் போடப்பட்டு பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த பூஜையில் இயக்குநர் சுந்தர்.சி, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், குஷ்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



பொதுவாக தான் நடிக்கும் படங்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்க்கும் நயன்தாரா, இன்று மூக்குத்தி அம்மன் 2 பட பூஜையில் கலந்து கொண்டார். பட பூஜையில் பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நயன்தாரா முக்குத்தி அம்மன் முதல் பாகம் போல இரண்டாம் பாகத்திலும் அம்மனாக நடிக்க ஒரு மாதம் விரதம் இருப்பதாக பாராட்டு தெரிவித்தார்.  
 

Share this story