வடிவேலுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய மாரீசன் படக்குழு...!
தனது காமெடியால் தமிழ் சினிமாவில் கோலோச்சியவர் வடிவேலு. பின்பு ஹிரோவாகவும் நடித்து தற்போது காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வடிவேலுவின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு ரசிகர்களும் திரை பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி யுடன் நடிப்பதாக கேங்கர்ஸ் பட அறிவிப்பு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியானது. இதையடுத்து தற்போது மாமன்னன் வெற்றிக்குப் பிறகு ஃபகத் ஃபாசிலுடன் அவர் நடித்து வரும் ‘மாரீசன்’ படத்தில் இருந்து வடிவேலுவுக்கு வாழ்த்து போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அப்போஸ்டரில் படத்தின் கதாபாத்திர லுக்கில் வடிவேலு இடம்பெற்றுள்ளார். மேலும் ஊர் முழுக்க கொண்டாட்ட மனநிலையில் இருப்பது போல அமைந்திருக்கும் அப்போஸ்டரில் மக்களுக்கு நடுவில் வடிவேலு சிரித்தபடி இருக்கிறார்.
இப்படத்தை ஆர்பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சுதீஷ் சங்கர் இயக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏற்கனவே படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் படக்குழுவின் இந்த வாழ்த்துப் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.