"வாழை படத்தில் அருமையான நடிப்பு"... ’குக் வித் கோமாளி’ புகழ் நடிகை திவ்யா துரைசாமியை பாராட்டிய மிஷ்கின்..!

Divya duraisamy

'வாழை' திரைப்படம் நேற்று வெளியாகி வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், அப்படத்தில் நடித்த குக் வித் கோமாளி புகழ் நடிகை திவ்யா துரைசாமியை இயக்குநர் மிஷ்கின் வெகுவாக பாராட்டியுள்ளார்.
 
 இயக்குநர் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் பா.ரஞ்சித்திற்கு பிறகு சமூகநீதி பேசும் படங்களை எடுத்து தனக்கென தனியிடம் பிடித்துள்ளவர். இதுவரை திரையில் எவரும் பேச மறுக்கும் யாரும் பார்த்திராத கதாபாத்திரங்களை தனது படத்தின் கதை மாந்தர்களாக்கி அவர்களது துயர வாழ்வை செல்லுலாய்டில் படம்பிடித்து காட்டி வருபவர் மாரி செல்வராஜ். 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்', 'மாமன்னன்' உள்ளிட்ட சமூகநீதி பேசும் திரைப்படங்களை இயக்கி உள்ளார். இப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார். கபடி விளையாட்டு வீரரை பற்றிய படமாக உருவாகி வரும் இப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'வாழை' என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. கலையரசன் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதில், நிகிலா விமல், குக் வித் கோமாளி புகழ் திவ்யா துரைசாமி உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேனி ஈஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Divya duraisamy

மேலும் மாரி செல்வராஜ் தயாரித்துள்ள முதல் படம் இதுவாகும். மாரி செல்வராஜின் வாழ்க்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தை பார்த்த திரைப் பிரபலங்கள் பலரும் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். இந்நிலையில் வாழை படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கிய நடிகை திவ்யா துரைசாமியை நேரில் சந்தித்த இயக்குநர் மிஷ்கின் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த வீடியோவை திவ்யா துரைசாமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இயக்குநர் மிஷ்கின், "நீங்கள் மிகவும் பெருமையாக உணர வேண்டும். நீங்கள் தமிழ் சினிமாவின் சிறந்த படத்தில் நடித்துள்ளதாகவும், இது மாரி செல்வராஜின் அற்புதமான படைப்பு எனவும் பாராட்டியுள்ளார். மேலும் திவ்யா துரைசாமி, சிறுவன், மற்றும் கலையரசன் ஆகியோர் நடிப்பு அருமையாக இருந்தது. நீங்கள் நிறைய படங்கள் நடிக்க வேண்டும், நானும் உங்களுடன் பணியாற்றுவேன் " என்று மிஷ்கின் வாழ்த்தியுள்ளார்.

Share this story