வாடிவாசல் அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்... ரசிகர்கள் உற்சாகம்...

இயக்குநர் வெற்றிமாறன்- சூர்யா கூட்டணியில் உருவாக்கவுள்ள வாடிவாசல் படத்தின் இசையமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
அசுரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்குவதாக 2021 ஆம் ஆண்டு அறிவித்தார். சி.சு செல்லப்பா எழுதிய நாவலை மையப்படுத்தி இப்படத்தை இயக்க இருந்தார் வெற்றிமாறன். ஜல்லிகட்டை மையப்படுத்திய படம் என்பதால் இப்படத்திற்கு நிறைய முன்னேற்பாடுகள் தேவையாக இருந்தன. முதலில் முழுக்க முழுக்க நிஜ ஜல்லிகட்டு களத்தில் இப்படத்தை வெற்றிமாறன் எடுக்க நினைத்தார்.
பின் அதன் ஆபத்துகளை உணர்ந்து பகுதி லைவாகவும் மீதியை சி.ஜியில் எடுக்க முடிவுக்கு வந்தார். வாடிவாசல் படத்திற்கு என்றே தனியாக அனிமேட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தில் இயங்கும் காளை ஒன்றையும் படக்குழு தயார் செய்து வருகிறது. மேலும் நடிகர் சூர்யா இப்படத்திற்காக தனியாக காளை ஒன்றையும் வளர்த்து அதனுடன் பயிற்சி எடுத்து வந்தார்.
மேலும் வெற்றிமாறன் விடுதலை 2 பாகங்களில் பிஸியாக இருந்ததால் இந்த படம் கிடப்பில் போடப்பட்டது. விடுதலை 2 ஆம் பாகம் கடந்த டிசம்பர் மாதம் வெளியானதைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வாடிவாசல் படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் கலைப்புலி தானு.
அகிலமே ஆராதிக்க இனிதே ஆரம்பம் #VaadiVaasal@Suriya_offl #VetriMaaran@gvprakash https://t.co/lzKrLIdYGh
— Kalaippuli S Thanu (@theVcreations) March 7, 2025
அண்மையில் ஒரு கல்லூரி விழாவில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு வரும் மே அல்லது ஜூன் மாதம் தொடங்கும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், வாடிவாசல் படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கும் பணிகளை தொடங்கிவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதனால், சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.