‘தி ராஜா சாப்’ பட பாடல்கள் குறித்து இசையமைப்பாளர் தமன் ஓபன் டாக்...!

‘தி ராஜா சாப்’ படத்தின் பாடல்களை மீண்டும் உருவாக்க இருப்பதாக இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.
பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தி ராஜா சாப்’. மாளவிகா மோகன், நிதி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு தமன் இசையமைத்து வருகிறார். இப்படம் நீண்ட மாதங்களாக தயாரிப்பில் இருக்கிறது. இப்படத்தின் அப்டேட் ஏதும் பெரியளவில் வரவில்லை.
இதனிடையே, ‘தி ராஜா சாப்’ பாடல்கள் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார் இசையமைப்பாளர் தமன். அதில், “ஒரு படத்துக்கு இசை நிறுவனங்கள் 30-40 கோடிகள் முதலீடு செய்யும் போது, ஒரு இசையமைப்பாளராக சிறந்ததை வழங்குவது எனது பொறுப்பு என நம்புகிறேன். மேலும், இது பிரபாஸ் படம் என்பதால் மிகப் பெரிய ஒன்றை இலக்காகக் கொள்ள வேண்டும். சிறிது காலத்துக்கு முன்பு ‘தி ராஜா சாப்’ படத்துக்கான பாடல்களை உருவாக்கிவிட்டேன். ஆனால், அவை இன்னும் படமாக்கப்படாததால், அவை பழையதாகி விட்டதாக உணர்ந்தேன். எனவே, அவற்றை எல்லாம் அழித்துவிட்டு, மீண்டும் பாடல்களை உருவாக்கி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.