இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்த முத்துக்காளை...!

இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து நடிகர் முத்துக்காளை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா லண்டனில் தனது ‘வேலியண்ட்’ சிம்பொனியை அரங்கேற்றினார். இந்தியாவிலேயே சிம்பொனியை அரங்கேற்றும் முதல் இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்நிலையில் இளையராஜாவை அரசியல் பிரபலங்கள் முதல் திரையுலகினர் வரை பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் முத்துக்காளை இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “எங்கள் ஊருக்கு அருகே உள்ள சத்திரப்பட்டியில் சிறு வயதில் நான் ஒரு மளிகை கடையில் வேலை செய்யும் போது எதிரே ஒரு ஹோட்டல் கடை. அங்கு அன்னக்கிளி பட பாடல் ரெக்கார்டர் போடும் போது, நான் மளிகை கடையில் எந்த வேலை இருந்தாலும் அப்படியே விட்டுவிட்டு அந்த ஸ்பீகருக்கு முன்னால் போய் நின்று விடுவேன். அப்படி நின்றதனால் கடை ஓனரிடம் பல முறை அடி வாங்கி இருக்கிறேன்.
அப்படி ஒரு ரசிகன் இல்லை, வெறியன்.நான் சினிமாவிற்கு வந்த பிறகு பலமுறை அவரை நேரில் பார்த்து இருந்தாலும், 1990 வருடம் பிரசாத் ஸ்டுடியோவில் இயக்குனர் கேயார் அவர்கள் இயக்கும் ஈரமான ரோஜாவே பட பூஜை ரெக்கார்டிங் பார்த்து பிரமித்து போனேன். இப்படி பல அனுபவங்கள். நேற்று சிம்பொனி நாயகரை சந்தித்து வாழ்த்து கூறி, ஆசி பெற்ற தருணம். அவருடைய இசையில் நான் பல படங்கள் நடித்து இருந்தாலும் அவரோடு போட்டோ எடுப்பது இதுவே முதல் முறை. மகிழ்ச்சி” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.