விஜய் சாரிடம் பேசும் போது கைகள் நடுங்கின : நடிகை மமிதா பைஜு

விஜய்யை நேரில் சந்தித்த தருணம் குறித்து பூரிப்புடன் விவரித்து இருக்கிறார் மமிதா பைஜு.
‘ஜன நாயகன்’ படத்தில் விஜய்யுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மமிதா பைஜு. இப்படத்தின் பூஜையில் விஜய்யுடன் மமிதா பைஜு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. தற்போது விஜய்யை முதன்முறையாக நேரில் சந்தித்த போது என்ன நடந்தது என்பதை பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.
அந்தப் பேட்டியில் மமிதா பைஜு, “விஜய் சாரை நேரில் பார்த்தபோது மிகவும் பதற்றமடைந்து விட்டேன். ஹாய் சார் என்று சொன்னேன். அதற்கு மேல் பேச முடியவில்லை. கைகள் நடுங்கின. இதை தெரிந்துகொண்டு விஜய் சார் என்னை நோக்கி நடந்து வந்து அமைதியாக ‘ஹாய் மா’ என்று கை கொடுத்து அரவணைத்துக் கொண்டார். அந்தத் தருணத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. விஜய் ரசிகையாக அந்த உணர்வை வெளிப்படுத்த முடியாது. ‘ஜன நாயகன்’ படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் ஹாய் சொல்வது அவருடைய வழக்கம்” என்று தெரிவித்துள்ளார் மமிதா பைஜு.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பாபி தியோல், கவுதம் மேனன், பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘ஜன நாயகன்’. ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். கே.வி.என் நிறுவனம் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.