அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி

udhainidhi

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் நடிகர் நாசர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் நடிகர் விஷால், பொருளாளர் நடிகர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் உள்பட நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடம் கட்டப்படுவதற்கு அளித்துவரும் ஆதரவுகளுக்காக நடிகர் சங்கப் பொதுக்குழு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. நடிகர் சங்கக் கட்டிடம் 25 கோடி ரூபாய் வங்கிக் கடன் மூலம் கட்டப்படுகிறது. இதற்கு தேவையான 12 கோடி ரூபாய் வங்கிக் கடன் டெபாசிட் தொகைக்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.

udhainidhi

மேலும் தம் நண்பர்கள் மூலம் 5 கோடி ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்வதற்கும் பரிந்துரைகள் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, நடிகர் சங்கப் பொதுக்குழு கூட்டம்  நடைபெற்ற போது, அதில் பேசிய சங்க நிர்வாகிகள், சங்க கட்டிடத்துக்காக கடன் வாங்கும் போது தேவையான டெபாசிட் தொகையில் பெரும் தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துப் பாராட்டி பேசினர். மேலும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர் பெருமக்களுக்கும், குறிப்பாக வங்கி வைப்புத் தொகைக்காக பெரும் நிதி திரட்டிட ஏற்பாடு செய்தமைக்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Share this story