இளமை பருவ புகைப்படங்களை வெளியிட்ட நதியா.. வைரலாகும் புகைப்படம்
‘பூவே பூச்சூடவா’ தோற்றத்தில் நடிகை நதியா வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தமிழ் சினிமாவில் 80-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா. தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த அவர், ‘பூவே பூச்சூடவா’ படத்தின் அறிமுகமானவர். அதன்பிறகு உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக நடித்துள்ளார்.

சினிமா உலகின் ஜான்பவான்களான சிவாஜி, ரஜினிகாந்த், பிரபு, மோகன்லால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த நதியா, நீண்ட இடைவெளிக்கு பிறகு 2004-ல் ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். தொடர்ந்து அக்கா, அம்மா, அண்ணி என்று குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நடித்து வரும் இவர், சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். இன்றும் இளமை தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் ‘பூவே பூச்சூடவா’ இளமை தோற்றத்தில் உள்ள புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

