சசிகுமார் பிறந்தநாளில் ’நந்தன்’ பட இயக்குநர் வெளியிட்டுள்ள உணர்ச்சிகர பதிவு!

nandhan

சசிகுமார், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் 'நந்தன்' திரைப்படம் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்தின் இயக்குநர் இரா.சரவணன் சசிகுமார் எதிர்கொண்ட சிரமங்கள் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
 இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், பாலாஜி சக்திவேல், ஸ்ருதி பெரியசாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி வெளியான திரைப்படம் 'நந்தன்'. ஜிப்ரான் இசையமைத்துள்ள 'நந்தன்' திரைப்படம் கிராம பஞ்சாயத்து தேர்தல் மூலம் ஏற்படும் சாதியக் கொடுமைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சசிகுமார் நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான், நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பாராட்டியுள்ளனர். நடிகரும் இயக்குநருமான சசிகுமார் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், நந்தன் பட இயக்குநர் இரா.சரவணன் உணர்ச்சிகரமான நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.


அவரது பதிவில், “வேறு யாராக இருந்தாலும் ‘போடா அங்கிட்டு’ என சொல்லியிருப்பார்கள். சசிகுமார் நந்தன் படத்திற்காக கெட்டப் தொடங்கி குணாதிசயம் வரை அனைத்தையும் மாற்றினார். கேரவன் ஏறக்கூடாது என்பேன், கட்டாந்தரையில் உட்கார்த்திருப்பார். சசிகுமாரை முகத்தில் மிதிக்கிற காட்சிக்கு அவருடன் வந்தவர்கள் முடியாது என்றார்கள். பாலாஜி சக்திவேல் கையெடுத்து கும்பிட்டார்.


நான் பாலாஜி சக்திவேலிடம் வெறிக்கொண்டு மிதிக்க சொன்ன போது சசிகுமார் எனது அருகில் நின்று கொண்டிருந்தார். சண்டைப் பயிற்சியாளர் ஜான் மார்க்கிடம் பழுப்பேறிய தென்னை மட்டைகளை கொண்டு தாக்கும்படி கூறினேன். அவர் படப்பிடிப்பு தளத்தை விட்டு சென்றுவிட்டார். யாரும் சசி சார்னு இரக்கப்படுறதோ லேசுபாசா நடந்துக்கிறதோ கூடாது, தென்னை மட்டை அவர் முதுகுல போர்ஸா விழனும். தரதரன்னு சசிகுமாரை இழுத்துட்டுப் போகணும். உதைச்சு பாத்ரூம்ல தள்ளனும் என ஊர் மக்கள் மத்தியில் கத்தினேன்.

க்ளைமாக்ஸ் காட்சிகள் படமான போது சசிகுமார் சாரிடம் பேசுவதையே நான் தவிர்த்தேன். என் உதவியாளர்கள் மூலமாகவே தகவலை தெரிவிப்பேன். அக்காட்சியின் போது, வேடிக்கை பார்த்தவர்கள் கூட என்னைத் திட்டித் தீர்த்தார்கள். மூங்கில் கம்பு தோள் பட்டையைக் கிழித்து கொட்டியது ரத்தம். தென்னை மட்டை நடு முதுகில் விழுந்ததில் முதுகு முழுக்கக் காயமாகி, சசி சாருக்கு ஜுரம் வந்தது. நான் இயக்குநராக எதை வேண்டுமானாலும் விரும்பலாம். ஆனால், கதாநாயகனாக சசிகுமார் இவற்றுக்கெல்லாம் கட்டுப்பட்டு நின்றிருக்கத் தேவையில்லை. ஆனால், எல்லாவற்றையும் அவர் ஏற்று நின்றார். “என்னை மன்னிச்சிடுங்க சார்…” என பதிவிட்டுள்ளார்.

Share this story