'லேடி சூப்பர் ஸ்டார்' பட்டம் வேண்டாம் என கூறினேன் : மனம் திறந்த நடிகை நயன்தாரா..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா அளித்துள்ள பேட்டியில், லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் தனக்கு வேண்டாம், அதைபயன்படுத்தாதீர்கள் என பலமுறை இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.
சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நயன்தாரா முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த படத்தை தொடர்ந்து, தனது இரண்டாவது படத்திலேயே சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார். இதையடுத்து, விஜய், அஜித், சூர்யா, சிம்பு, ஜெயம்ரவி, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவே மாறினார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழி முன்னணி நடிகர்களுடனும் நடித்து பெயர் எடுத்த நயன்தாராவை ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடி வருகின்றனர்.
— Amuthabharathi Videos (@Videos2345) December 12, 2024
பெரும்பாலும் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ளாத நயன்தாரா, தற்போது, ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார். அதில், லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து தொகுப்பாளர் கேள்வி கேட்க, அதற்கு பதில் அளித்துள்ள நயன்தாரா, என்னுடைய அடுத்த மிகப்பெரிய சர்ச்சையே அதுதான். லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தால் நான் பல பின்னடைவுகளை சந்தித்து இருக்கிறேன். கடந்த நான்கு, ஐந்து வருடமாக டைட்டில் கார்டு போட வேண்டாம் என்று தயாரிப்பாளரிடமும் இயக்குனரிடமும் பலமுறை சொல்லி இருக்கிறேன். அந்த பட்டத்தை பார்க்கும் போதே எனக்கு பயமாக இருந்தது. பட்டத்தால் எதுவும் நடந்து விடாது என்று எனக்கு நன்றாக தெரியும். ஆனால் எனது ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு, மரியாதை காரணமாக என்னை அப்படி அழைத்து வருகிறார்கள். நானாக இரவு முழுவதும் யோசித்து இந்த பட்டத்தை எனக்கு கொடுங்கள் என்று யாரிடமும் சொல்லவில்லை யாருடைய பட்டத்திற்கும் நான் ஆசைப்படவும் இல்லை. இது ஒரு சிறிய உலகம், இதில் ரசிகர்களை எந்த வகையிலும் நாம் முட்டாளாக்க முடியாது. நான் சிறந்த நடிகை, நான் சிறந்த டான்ஸர் என்று எப்போதும் சொல்லிக் கொண்டது இல்லை ஆனால், இந்த இடத்தில் இருக்கிறேன். இதற்காக கடுமையாக உழைத்திருக்கிறேன். அதற்காக ரசிகர்கள் என் மீது அன்பு இருப்பதால் என்னை, லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். இது ஒவ்வொரு படத்திலும் டைட்டிலில் வரும் போது எனக்கே என்னடா என்று தான் இருந்தது. ஆனால் வெற்றிகரமான ஒரு பெண்ணை பார்க்கும்போது யாருக்கு என்ன பிரச்சனை என்று எனக்கு புரியவில்லை. ஆனால் ஒரு பிரச்சனை இருக்கிறது என்பது மட்டும் எனக்கு நன்றாக தெரிகிறது என்றார். அவரது பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.