நயன்தாரா - விக்னேஷ் சிவனால் மன உளைச்சலுக்கு ஆளானேன்.. இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் பதிலடி..

ss kumaran

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் இருவரும் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருப்பதாக இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.நடிகை நயன்தாராவின் டாக்குமெண்ட்ரி நவம்பர் 18 அன்று வெளியாக இருக்கும் நிலையில், அந்த டாக்குமெண்ட்ரியில் ‘நானும் ரெளடிதான்’ படக்காட்சிகளைப் பயன்படுத்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்றும் தன் மீதான தனிப்பட்ட வன்மம் தான் இதற்குக் காரணம் என்றும் நயன்தாரா நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். விக்னேஷ் சிவனும் தனுஷூக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

vignesh shivan
இந்த நிலையில் இயக்குநர் எஸ்.எஸ்.குமரன், நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் இருவரும் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருப்பதாகக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘மூன்று வினாடி காட்சிக்காக நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் அவர்கள் உங்கள் மீது வழக்கு தொடர்ந்ததாய் வெகுண்டு எழுந்த நீங்கள் கடந்த ஆண்டு எல்ஐசி என்ற என் தலைப்பை உங்கள் கணவர் விக்னேஷ் சிவன் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதை அறிந்திருப்பீர்கள்.

எல்ஐசி என்ற தலைப்பு என் நிறுவனத்தின் பெயரில் இருப்பதை அறிந்த விக்னேஷ் சிவன் தன் மேலாளர் மூலம் என்னிடம் கேட்டு வழங்காத நிலையிலும் அதே தலைப்பை அவர் படத்திற்கு வைத்து விளம்பரப்படுத்தியது எந்தவிதத்தில் நியாயம்? என் கதைக்கும் அந்த தலைப்பிற்கும் பிரிக்க முடியாத ஒற்றுமை இருப்பதால் எல்ஐசி என்ற தலைப்பை வழங்க முடியாத சூழல் இருக்கிறது என்று நேர்மையான முறையில் பதில் அளித்தும் அதிகாரத்தன்மையுடன் அதே தலைப்பை தன் படத்திற்கு விக்னேஷ் சிவன் வைக்கிறார் என்றால் ’உன்னால் என்ன பண்ண முடியும்?’ என்ற அதிகார நிலை தானே காரணமாய் இருக்க முடியும். அதற்கு எந்த கடவுள் மன்றத்தில் விக்னேஷ் சிவனை பதில் சொல்ல சொல்வீர்கள்?

nayan
உங்களை விடவும் பலம் பொருந்தியவர்கள் என்றால் இரண்டு வருடம் பொறுமையோடு பயன்படுத்த அனுமதி கேட்கும் நீங்கள் எளிய சிறிய படைப்பாளியான என்னிடம் எதேச்சிகாரத்துடன் நடந்து கொண்டு என்னை மன உளைச்சல் ஆக்கியதற்காக நிச்சயம் கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டும். இப்பொழுது வரை அந்த தலைப்பினால் ஏற்பட்ட மன உளைச்சல் என்னை பாதித்துக் கொண்டிருக்கிறது. என் படத்தையும் அது பாதிப்படைய செய்திருக்கிறது.

எந்த படைப்பாளியும் தன் படைப்பைப் பல காரணங்களோடும் பல பொருட்செலவோடும் தான் கட்டமைக்கிறார்கள். நீங்கள் உங்கள் வியாபார நோக்கத்திற்காக அதை பயன்படுத்தும் பட்சத்தில் முறையான அனுமதியோடும் முறையான மதிப்பூதியத்துடனும் பயன்படுத்த வேண்டும் என்ற அறத்தைக் கைக்கொள்ள வேண்டும். நீங்கள் இங்கு எதையும் இலவசமாக செய்யவில்லை. எங்கள் படைப்புகளை மட்டும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பது மூலம் படைப்புலகத்திற்கு மிக மோசமான வழிகாட்டியாக நீங்களும் உங்கள் கணவரும் இனம் காட்டப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்க’ என அதில் தெரிவித்திருக்கிறார்.

Share this story