"ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு"... பிக்பாஸ் சீசன் 8 தொடங்கும் தேதி அறிவிப்பு
பிக்பாஸ் 8வது சீசன் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 6ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் டிவியில் கடந்த 7 சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ’பிக்பாஸ்’ (Bigg Boss). பிரபலங்கள் ஒரே வீட்டில் செல்போன், டிவி என எந்த வித தொழில்நுட்பம் மற்றும் வெளியுலக தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் இருக்க வேண்டும். பிக்பாஸ் வீட்டில் அனைத்து பகுதிகளிலும், கேமரா பொருத்தப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு வார முடிவிலும் மக்கள் ஓட்டெடுப்பின் அடிப்படையில் ஒருவர் வெளியேற்றப்படுவார். தமிழில் ஆரம்பம் முதல் பிரபல நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். வார இறுதி நாட்களில் கமல்ஹாசன் வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் டிவி முன் ஆர்வத்துடன் அமர்ந்தனர்.
#GrandLaunch of Bigg Boss Tamil Season 8 - அக்டோபர் 6 முதல் மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. 😎
— Vijay Television (@vijaytelevision) September 24, 2024
உங்க விருப்பமான show.. இன்னும் நெருக்கமா.. ❤️🔥 ஏன்னா, இந்த வாட்டி "ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு.." 🔥 #VJStheBBhost @VijaySethuOffl 😍 pic.twitter.com/Cq71wCJfHN
இந்நிலையில் தனது படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் 8வது சீசனிலிருந்து விலகுவதாக கமல்ஹாசன் தெரிவித்தார். இந்த ஆண்டு பிக்பாஸ் 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார். இதுகுறித்து வெளியான ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மக்கள் விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை எவ்வாறு நடத்த வேண்டும் என யோசனை கூறுவது போல ப்ரோமோ காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் பிக்பாஸ் 8வது சீசன் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 6ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என விஜய் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. இந்த பிக்பாஸ் சீசன் 8இல், தயாரிப்பாளர் ரவீந்திரன், குக் வித் கோமாளி ஹன்ஷிதா ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.