ஆஸ்கரில் புதிய பிரிவு இணைப்பு.. இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி வரவேற்பு...!

rajamouli

உலகப் புகழ்பெற்ற ஆஸ்கர் விருதில் புதிய பிரிவு இணைக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த பிரிவில் 2028 ஆம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆஸ்கர் அகடமி இது குறித்து கூறிய போது, அதிரடி ஸ்டண்ட் காட்சிகளுக்கு கௌரவம் செலுத்தும் வகையில் ஸ்டண்ட் காட்சிகளுக்கான ஆஸ்கர் விருது 2028 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட இருக்கிறது. ஆஸ்கர் விருதுகளின் நூறாவது ஆண்டு விழா 2028 என்ற நிலையில் இந்த பிரிவு இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு திரைப்படத்தில் சண்டை காட்சி என்பது மாயாஜாலத்தில் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. எனவே, ஆஸ்கர் விருதுகளில் அவை ஒரு பகுதியாக மாறுகின்றன. 2028 ஆம் ஆண்டு நடைபெறும் ஆஸ்கார் விழாவில் ஸ்டண்ட் பிரிவுக்காக விருது வழங்கப்படும் என்றும், 2027 ஆம் ஆண்டு வெளியாகும் படங்களுக்கு இந்த விருது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அனேகமாக, எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் 2027-இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஸ்டண்ட் காட்சிகளுக்கான முதல் ஆஸ்கர் விருது ஒரு இந்திய படத்திற்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே சமீப காலத்தில் தான் தேசிய விருதில் ஸ்டண்ட் பிரிவு சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது ஆஸ்கர் விருதுகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது ஸ்டண்ட் இயக்குனர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



இதை முன்னிட்டு ராஜமௌலி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, 'இறுதியாக!' 100 வருட காத்திருப்புக்குப் பிறகு! 2027 இல் வெளியாகும் படங்களுக்கான புதிய ஆஸ்கார் ஸ்டண்ட் வடிவமைப்புப் பிரிவுக்காக உற்சாகமாக இருக்கிறேன். இதைச் சாத்தியமாக்கிய டேவிட் லீட்ச், கிறிஸ் ஓ'ஹாரா மற்றும் ஸ்டண்ட் சமூகத்திற்கு மிகப்பெரிய  நன்றி. ஸ்டண்ட்களின் சக்தியைப் பாராட்டியதற்காக அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி பில் கிராமர் மற்றும் தலைவர் ஜேனட் யாங் ஆகியோருக்கு மிக்க நன்றி. எனது 'RRR' படத்தின் அதிரடி காட்சிகள் அறிவிப்பில் பிரகாசிப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.' என்று தெரிவித்துள்ளார். 

Share this story