தனுஷ் இயக்கத்தில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ முதல் சிங்கிள் ஆக.30-ல் ரிலீஸ்!
தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகரான தனுஷ், ‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். அடுத்து அவர் இயக்கிய ‘ராயன்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது. இந்தப் படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் 3-ஆவதாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படத்துக்கு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
இதில், தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்தப் படத்தை தனுஷின், வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. காதல் கதையை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தின் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தனர். இப்பாடலிற்கு கோல்டன் ஸ்பேர்ரோ என்ற தலைப்பு வைத்துள்ளனர். இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்து இருக்கிறார் என தெரிவித்துள்ளனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பிரியங்கா மோகன் மடி சேரி லுக்கில் இருக்கிறார். இந்நிலையில், இப்பாடல் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷ் 4-ஆவதாக ஒரு படத்தை இயக்குகிறார். இதனை நித்யா மேனன் உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் அண்மையில் அளித்த பேட்டியில், “திருச்சிற்றம்பலம்' படத்துக்குப் பிறகு தனுஷுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன். அவரே அதை இயக்குகிறார். அதுவும் சிறந்த படமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.