நிமிஷா சஜயனின் புதிய படம் ‘என்ன விலை’ - ஆகஸ்ட் இறுதியில் படப்பிடிப்பு நிறைவு

Nimisha

நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய தமிழ் படத்துக்கு ‘என்ன விலை’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இம்மாத இறுதியில் படப்பிடிப்பு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு திலீஷ் போத்தன் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ‘தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்’. இந்தப் படத்தின் திரைக்கதை ஆசிரியரான சஜீவ் பழூர் தேசிய விருது பெற்றவர். இந்நிலையில் அவர் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.‘என்ன விலை’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், கருணாஸ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், விஜயலட்சுமி, ஷாஷா, பிரவீனா, கமலேஷ், கோலி சோடா பாண்டி, சேத்தன் குமார், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இத்திரைப்படம் த்ரில்லர் அம்சங்களுடன் கூடிய ஒரு ஃபேமிலி டிராமாவாக உருவாகியுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியில் ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், இரண்டாவது ஷெட்யூல் தொடங்கியுள்ளது. இந்த ஷெட்யூல் 8 நாட்கள் படமாக்கப்படும். அதைத் தொடர்ந்து, 12 நாட்கள் சென்னை மற்றும் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு, இம்மாத இறுதிக்குள் முழு படப்பிடிப்பும் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படம் குறித்து இயக்குநர் சஜீவ் பழூர் கூறும்போது, “என்ன விலை படம் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். குறிப்பாக, நிமிஷா சஜயன் போன்ற திறமையான பல நடிகர்கள் படத்தில் இருப்பதால் படப்பிடிப்பு மிகவும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன், நிமிஷாவுடன் 'தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்' என்ற படத்தில் வேலை பார்த்துள்ளேன். ஆனால் இப்போது திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் இரண்டிலுமே அவரது பேக்-டு-பேக் ஹிட் கொடுத்து நடிகையாக அவர் உயர்ந்த இடத்தை அடைந்துள்ளார். ’என்ன விலை’ திரைப்படம் ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வித்தியாசமான மற்றும் புதிய நிமிஷாவைக் காண்பிக்கும்” என்றார்.

Share this story