"தங்கலான் ஓ.டி.டி ரிலீஸுக்கு தடையில்லை" - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

thangalan

தங்கலான் திரைப்படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிட எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்த 'தங்கலான்' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்த இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான தங்கலான் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

தங்கலான் திரைப்படத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில்,திருவள்ளூரைச் சேர்ந்த பொற்கொடி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.அதில், "இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் வைணவர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாக" கூறப்பட்டுள்ளது.

மேலும், "புத்த மதம் குறித்து புனிதமான முறையிலும், வைணவத்தை நகைச்சுவையாக சித்தரிக்கும் வகையிலும், தங்கலான் படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே படம் திரையரங்குகளில் வெளியான நிலையில், விரைவில் ஓ.டி.டி தளத்திலும் வெளியாக உள்ளது. அவ்வாறு வெளியானால் இரு பிரிவினரிடையே மத மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தங்கலான் படத்தை ஓ.டி.டி-யில் வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "தங்கலான் திரைப்படம் தணிக்கை சான்று பெற்று திரையரங்குகளில் வெளியாகி இருப்பதால், தங்கலான் திரைப்படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிட எந்த ஒரு தடையும் இல்லை" என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Share this story