உண்மை சம்பவத்தை நல்ல கருத்துடன் படமாக்கி இருக்கும் "நூறு சாமி" பட விமர்சனம்
தனது 26 வயதிலேயே கணவரை இழந்த சுவாசிகாவுக்கு அஜய் தீஷன், சக்தி ஆகிய மகன்கள் இருக்கின்றனர். தனி மனுஷியாக போராடி மகன்களை வளர்க்கும் அவரை ஊரிலுள்ள பலர் தவறாக விமர்சிக்கின்றனர். 42 வயதில் விஜய் ஆண்டனியை மறுமணம் செய்ய அவர் விரும்புகிறார். அவரது குடும்பத்தினரே ஆணவக்கொலை செய்ய துடிக்கின்றனர். பிறகு என்ன நடந்தது என்பது புரட்சிகரமான கிளைமாக்ஸ்.
சிறப்புத்தோற்றம் மாதிரி வரும் விஜய் ஆண்டனியின் துணிச்சலுக்கும், நேர்மைக்கும் பாராட்டுகள். சுவாசிகாவின் விஸ்வரூப நடிப்புதான் படத்தின் அச்சாணி. பல சீனியர் நடிகைகளுக்கு நிகராக யதார்த்தமாக நடித்துள்ள அவருக்கு நிறைய விருதுகள் கிடைக்கும். மறுமணத்துக்காக மகன்களை பிரிவதா என்று அவர் இதயம் வெடித்து சிதறும் காட்சி, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். மறுமணத்தை ஆதரிக்கும் விஜய் ஆண்டனியின் திரை இருப்பு நேர்த்தியாக இருக்கிறது. மகன்களாக அஜய் தீஷன், சக்தி இருவரும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்து அசத்தியுள்ளனர். முக்கிய கேரக்டர்களில் கருணாஸ், பாலாஜி சக்திவேல், லிஜோமோல் ஜோஸ், பாடினி குமார், காவ்யா அனில், அருள்தாஸ், முனீஷ்காந்த், ஜென்சன் திவாகர், சபீதா ராய், பக்ஸ், வினோதினி வைத்தியநாதன், மூர்த்தி நடித்து கவனத்தை ஈர்த்துள்ளனர்.

