“பெரிய வசூல் செய்யும் படங்கள் எல்லாம் நல்ல படங்கள் கிடையாது” - எச்.வினோத்

Hvinoth

‘அயோத்தி’, ‘கருடன்’, படங்களுக்கு பிறகு சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நந்தன்’. இயக்குநர் இரா. சரவணன் இயக்கியுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘இரா’ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று(13.09..2024) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குநர் எச்.வினோத் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். அப்போது எச்.வினோத் பேசுகையில், “இரா. சரவணன் இந்த படத்தை பார்க்கச் சொன்னார். ஆனால், சசிகுமாரும் சரவணனும் ஏற்கனவே உடன்பிறப்பு மாதிரி என்பதால் படமும் ரொம்ப பாசமழையாக இருக்கும் என்று நினைத்து படம் பார்ப்பதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தேன். அதன் பிறகு நண்பர்களுடன் இணைந்து படம் பார்க்க முடிவு செய்து, படம் பார்க்க ஆரம்பித்தேன். 

படம் ஆரம்பித்த 15 நிமிடங்கள் சாதாரணமாக ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் சசிகுமார் லுக் ரொம்ப வியப்பாக இருந்தது. போகப் போகப் படத்தில் வரும் கட்சிகளும் கதாபாத்திரங்களின் நடிப்பும் மனதிற்கு நெருக்கமாக இருந்தது. நிறைய விஷயங்கள் பார்ப்பதற்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் கிராமத்திலிருந்து வந்தாலும் கூட படத்தில் வரும் சில காட்சிகள் எனக்கு வியப்பாகத்தான் இருந்தது. பெரிய பட்ஜெட்டில் எடுக்கின்ற படமோ பெரிய ஹீரோவை வைத்து எடுக்கின்ற படமோ பெரிய வசூல் செய்யும் படங்கள் எல்லாம் நல்ல படங்கள் கிடையாது. ஒரு மனிதனை நல்ல மனிதனாக அல்லது நல்ல மனிதனாக மாற்ற முயற்சிக்கும் படங்கள்தான் நல்ல படங்கள். அந்த வகையில் நந்தன் திரைப்படம் நம்மை நல்ல மனிதனாக மாற்ற முயற்சி பண்ணுகிறது. ரொம்ப நல்ல படம் கண்டிபாக ஆதரவு கொடுங்கள் நன்றி” என்றார்.

Share this story