“இப்போ தெரியுதா...” - அஜித் கூறியதை பகிர்ந்த சூர்யா...!
சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் படம் கங்குவா. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். மேலும் வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். இவரும் இந்தப் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இவர்களைத் தவிர்த்து யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இப்படத்தின் க்ளிம்ஸ், டீசர், ட்ரைலர் மற்றும் ‘ஃபயர் சாங்...’, ‘யோலோ’ ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகிறது. 3டி தொழில்நுட்பத்தில் 38 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளை ஆரம்பித்துள்ளது படக்குழு.
அந்த வகையில் பிரபல ஊடகத்திற்கு சிவா மற்றும் சூர்யா இருவரும் பேட்டி கொடுத்தனர். அப்போது சிவாவுடன் பணியாற்றியது பற்றி பேசிய சூர்யா, “சிவாவுடன் யாராக இருந்தாலும் ஒர்க் பண்ண தோணும். அஜித் சாரை சமீபத்தில் சந்தித்தேன். அப்போது அவர், ‘இப்போ தெரியுதா நான் ஏன் சிவாவை விடலன்னு’ சொன்னார். ஒரு முறை சிவாவுடன் வேலை செய்துவிட்டால் அவரை விட்டு வர நீங்கள் விரும்ப மாட்டீர்கள். அவர் வேறொரு நடிகருடன் வேலை செய்வதை பார்க்கும் போது பொறாமையாக இருக்கும்” என்றார். சிறுத்தை சிவா - அஜித் இருவரும் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.