அச்சச்சோ..! என்னாச்சு ? ஹன்சிகா மோத்வானி திருமண வாழ்க்கையில் விரிசல்!
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவர் 2000களில் வெளியான ஷக்கலக்க பூம் பூம் என்ற குழந்தைகளுக்கான தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து முதலில் இந்தியில் கதாநாயகியாக அறிமுகமானார். ஹன்சிகா மோத்வானி இந்தி, தெலுங்கு மொழிகளைத் தொடர்ந்து 2011ல் வெளிவந்த தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் இவர் தமிழிலும் அறிமுகமானார். தொடர்ந்து வேலாயுதம், அரண்மனை, ரோமியோ ஜூலியட், சிங்கம் 2 என பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து வந்தார். இவருக்கும் மும்பையைச் சேர்ந்த பிரபலத் தொழிலதிபர் சோஹேல் கதுரியா என்பவருக்கும் 2022ல் திருமணம் நடைபெற்றது. இதற்கிடையே திருமணமாகி இரண்டே ஆண்டுகளில் நடிகை ஹன்சிகா மோத்வானி- சோஹேல் கதுரியா திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. திருமணமாகி மூன்று வருடங்கள் கூட நிறைவடையாத நிலையில், ஹன்சிகாவுக்கும், தொழில் அதிபர் சோஹேலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வாழ்வதாக வெளியாகும் செய்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹன்சிகா தனது தாயுடன் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதேபோல சோஹேலும் தனது பெற்றோருடன் தங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2022 டிசம்பரில் இந்த ஜோடிக்குத் திருமணம் நடந்தது. முதலில் சோஹேலின் குடும்பத்துடன் ஒன்றாகவே ஹன்சிகா வசித்து வந்தார். இருப்பினும், சோஹேல் குடும்பத்தினருடன் ஒன்றாக இருக்கும்போது சில பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் இதனால் அதே கட்டிடத்தில் வேறொரு வீட்டிற்கு அவர்கள் மாறியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதன் பிறகும் பிரச்சினை முடியவில்லையாம். கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து இருந்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்தே இருவரும் பிரிந்து வாழ்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் பிரபல ஆங்கில ஊடகத்தில் முதலில் இந்தச் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இது குறித்து ஹன்சிகா தரப்பில் இதுவரை எந்தவொரு விளக்கமும் இல்லை. அதேநேரம் தொழிலதிபர் சோஹேல் இந்தச் செய்தியை மறுத்துள்ளார். விவாகரத்து குறித்த செய்திகளில் உண்மையல்ல என்று மட்டும் தெரிவித்தார். அதேநேரம் அவர்கள் பிரிந்து வாழ்வது பற்றிக் கேட்டபோது அதற்கு எந்தவொரு பதிலும் இல்லை.

