ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படத்துக்கு இந்தியாவில் தடை... என்ன காரணம்?

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘Santosh’ படத்தை இந்தியாவில் வெளியிட மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) தடை விதித்துள்ளது.
இங்கிலாந்தில் வாழும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட சந்தியா சூரி என்பவர் இயக்கத்தில் ஜனவரி 10-ம் தேதி அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வெளியான படம் ‘Santosh’. இந்தியில் உருவான இப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டப்பட்டது. இங்கிலாந்து - பிரெஞ்சு கூட்டு தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இந்தப் படம் இங்கிலாந்து சார்பாக ஆஸ்கர் விருதுக்கு அதிகாரபூர்வமாக பரிந்துரைக்கப்பட்டது.
இந்தப் படம் இந்தியாவில் நிலவும் சாதி பாகுபாடு, ஆணாதிக்கம், பெண் வெறுப்பு, இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள், வெறுப்பு பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அழுத்தமாக பேசியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை இந்தியாவில் திரையிட சென்சார் போர்டு தடை விதித்துள்ளது.இது தொடர்பாக படத்தின் இயக்குநர் சந்தியா சூரி கூறுகையில், “சென்சார் போர்டின் இந்த முடிவு மிகுந்த ஏமாற்றத்தையும் வலியையும் ஏற்படுத்துகிறது. இந்திய சினிமாவுக்கு இது புதிய பிரச்சினை இல்லை. ஏனென்றால் இதுபோல பல படங்களுக்கு நடந்துள்ளது. சென்சார் போர்டு அதிகாரிகள் படத்தில் உள்ள ஏராளமான நீளமான காட்சிகளை நீக்க உத்தரவிட்டனர். அதை நீக்குவது படத்தின் மொத்த ஆன்மாவையும் பாதிக்கும். இந்தப் படம் இந்தியாவில் வெளியாவது மிகவும் முக்கியமான ஒன்று. அதை இந்தியாவில் வெளியிட எதுவும் வழி இருக்கிறதா என்பதை பார்க்கிறேன்” என்றார்.