“பொழுதுபோக்கிற்காக படம் பண்ணவில்லை” - பா.ரஞ்சித் விளக்கம்
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் தங்கலான். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஞானவேல் ராஜா தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படம் கடந்த சுதந்திர தினத்தன்று (15.08.2024) தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றது.
இப்படம் இந்தி மொழியில் வரும் 30ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மும்பையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தியது படக்குழு. அதில் விக்ரம், பா.ரஞ்சித். மாளவிகா மோகனன் ஆகியோர் பங்கேற்றனர். அதில் விக்ரம், இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பா.ரஞ்சித் பேசுகையில், “இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் சாதிய பிரச்சனை உள்ளது. அதனால் நானும் பாதிக்கப்பட்டேன். நான் சிறுவயதில் பாபாசாகேப் அம்பேத்கரால் ஈர்க்கப்பட்டு பின்தொடர்ந்து நிறைய கற்றுக் கொண்டேன். அதை என் கலைப் படைப்புகள் வழியாக விவாதிக்க தொடங்கினேன். நான் வெறும் பொழுதுபோக்கிற்காக படம் பண்ணவில்லை, நான் கற்றுக் கொண்டதை மக்களுக்கு சொல்லவும் விரும்புகிறேன்” என்றார்