“நான் பேசும் கருத்தில் முரண் இருக்கலாம்; ஆனால்…”- பா.ரஞ்சித்
பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘தங்கலான்’ திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது.இதில் பங்கேற்று பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “விக்ரமுடன் இணைந்து பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன். பார்வதி, மாளவிகா உள்ளிட்ட அனைவரும் கடினமான உழைப்பை செலுத்தியுள்ளனர். ஒரு இயக்குநரிடம் இப்படியான நடிகர்கள் கிடைத்தால், அந்த இயக்குநர் தான் நினைத்த கதாபாத்திரத்துக்கு உயிரூட்ட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர். இவர்களை படத்தில் நடிகர்களாக தேர்ந்தெடுத்ததை பெருமையாக நினைக்கிறேன். எதற்காக எனக்கு இவர்கள் இத்தனை உழைப்பு கொட்டி நம்பினார்கள் என்று நான் யோசித்திருக்கிறேன். நான் கேட்டதை சரியாக புரிந்து கொண்டு வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு நன்றி.
ஜி.வி.பிரகாஷுடன் முதன்முறையாக பணியாற்றியது போன்ற உணர்வே எழவில்லை. அவர் இந்த ஸ்கிரிப்டை நம்பினார். என்னை நம்பினார். பாடல்கள் மக்களால் கொண்டாடப்படுகிறது. அட்டகாசமான பின்னணி இசையை வழங்கியிருக்கிறார். முழு ஆதரவு கொடுத்த ஞானவேல் ராஜாவுக்கு நன்றி. இன்றைக்கு வரையிலுமே படத்தை வெளியிடுவதே சவால் நிறைந்ததாக உள்ளது. நிறைய பொறுப்புகளை வைத்துக்கொண்டு என்னை வந்து பார்த்தார். அத்தனை அழுத்தங்கள் இருக்கும் போதும் என்னை பார்த்து நான் டென்ஷனாக இருக்கிறேனா என்று அறிந்து கொண்டார். புரமோஷனை பொறுத்தவரை விக்ரம் முழு வீச்சில் செயல்பட்டார். தன்னால் முடிந்த அளவுக்கு பங்காற்றினார். ஆந்திராவில் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதற்கு காரணம் விக்ரம் தான்.
என்னை பொறுத்தவரை நான் ஒரு வரலாற்று பயணி. என்னுடைய படங்களின் வழியே வரலாற்றில் நான் என்னவாக இருந்திருக்கிறேன் என்பதை அறிந்து கொள்கிறேன். அந்த வகையில் தான் ‘தங்கலான்’ படத்தையும் உருவாக்கியிருக்கிறேன். வரலாற்று ரீதியாக தங்கலான் யார்? அவர் எப்படி விடுதலை அடைகிறார் என்பது தான் படம். அதனை என்னுடைய மொழியில் பேச முயன்றிருக்கிறேன்.
சினிமாவை இப்படி சொல்லலாம் என்று நான் முடிவெடுக்கும்போது, பார்வையாளர்களையும் கவனத்தில் கொள்கிறேன். தமிழ் ரசிகர்கள் வெகுஜன திரைப்படம், கலை ரீதியான திரைப்படம் என்றெல்லாம் பிரித்து பார்த்தது கிடையாது. அதனால் தான் நான் இங்கு இந்த இடத்தில் நிற்கிறேன். நான் பேசும் அரசியலை வைத்து என்னை ஓரங்கட்டியிருக்க முடியும். ஆனால் தமிழ் ரசிகர்கள் அப்படி செய்யவில்லை. மாறாக ஏற்றுக்கொண்டார்கள்.
நான் பேசும் கருத்தில் அவர்களுக்கு முரண் இருக்கலாம். ஆனால், என்னுடைய திரைமொழி அவர்களை என்கேஜ் செய்ததால், பார்வையாளர்கள் அதனுடன் கனெக்ட் ஆனார்கள். அது அவர்களை என்டர்டெயின் செய்தது. தன்னை யார் என்று அடையாளம் கண்டு கொள்ள விரும்பும் ஒருவரின் வரலாற்று தேடலை இந்தப் படம் பேசும். தங்கலானின் அக உலகம் எதனுடன் தொடர்பு கொண்டிருக்கிறது, வரலாற்றை அறிந்து கொண்டபின் தங்கலான் எந்த மாதிரியான முடிவை எடுக்கிறான் என்பது தான் படம். பார்வையாளர்களுக்கு இந்தப் படம் புதிய அனுபவத்தை கொடுக்கும். மக்கள் விரும்பும் மொழியில் பேசியிருப்பதால் கண்டிப்பாக அவர்களுடன் கனெக்ட் ஆகும் என நம்புகிறேன்” என்றார்.