ஏ.ஆர்.ரகுமான் மகன் பாடிய ‘நினைவிருக்கா’... ‘பத்து தல’ செகண்ட் சிங்கிள் கிளிம்ஸ் வீடியோ !

ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘பத்து தல’ படத்திலிருந்து இரண்டாவது பாடல் கிளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
‘ஜில்லுனு காதல்’ படத்தின் இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பத்து தல’. இந்த படத்தில் சிம்புடன் இணைந்து கௌதம் கார்த்திக்கும் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. அதனால் இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். தற்போது இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் ‘நம்ம சத்தம்’ முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் கிளிம்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ‘நினைவிருக்கா’ என தொடங்கும் இந்த பாடலை எவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கம்போஸ் செய்தார் என்பது வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
இதில் முக்கியமான சர்ப்ரைஸாக ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன் இந்த பாடலை பாடியுள்ளார். அவருடன் இணைந்து சக்திஸ்ரீ கோபலனும் இப்பாடலை பாடியுள்ளார். கபிலன் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.